சமூக வலைதளத்தில் ஆபாச, அவதூறு கருத்து பதிவு செய்பவர்களை கண்டறிய சிறப்பு பிரிவு : டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை:  சென்னையைச் சேர்ந்த மருதாசலம் என்பவர் நீதிபதி ஒருவருக்கு எதிராக சமூக வலைதளத்தில் ஆபாசமாக சில கருத்துகளை பதிவிட்டார். இதுதொடர்பாக போலீசார் அவரை கைது செய்தனர். இந்த நிலையில் அவர் ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஏற்கனவே, நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சமூக வலைதளங்களில் கடுமையாக ஆபாச வார்த்தைகளை பதிவிட்டு, அவதூறாக கருத்து தெரிவிப்பவர்கள்  மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதி நேற்று தீர்ப்பு வழங்கினார். இதுபோன்று சமூக வலைதளத்தில் அவதூறு கருத்துகள் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக எந்த ஒரு முறையான நடைமுறையும் இல்லை. இதுபோன்று அவதூறுகளை பரப்பி, கேவலமான புகழ் தேடுபவர்களை கிள்ளி எறிய வேண்டும். சமூக நல்லொழுக்கம் மற்றும் நல்லிணக்கத்தை காத்திட நீதித்துறைக்கு இதுவே சரியான நேரம்.

இதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்காவிட்டால் தனி நபர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அவதூறு பரப்புவோர் மீது கருணை காட்ட முடியாது.எனவே, தமிழக காவல்துறை டிஜிபி சமூக வலைதளங்களில் ஆபாசமாகவும், அவதூறாகவும் கருத்துகளை பதிவு செய்பவர்களை கண்டறிய மாவட்ட மற்றும் மாநில அளவில் அனைத்து காவல்நிலையங்களிலும் 2  மாதத்திற்குள் சிறப்பு பிரிவை அமைக்க வேண்டும். மேலும், அவதூறாக கருத்துகளை பதிவு செய்பவர்களை கண்டறியும் நிபுணத்துவத்தை சிறப்பு பிரிவில் நியமிக்கப்படுவோருக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 30ம் தேதிக்கு தள்ளி வைத்தார். மேலும், பதிவிட்ட மருதாசலம் தன்னுடைய பதிவுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதால் ஜாமீன் வழங்கியும் நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories: