வடரெங்கம் ரெங்கநாதபெருமாள் கோயிலுக்கு செல்லும் சாலையில் கருவேல மரங்களால் பக்தர்கள் அவதி

கொள்ளிடம்: கொள்ளிடம் அருகே வடரெங்கம் ரெங்கநாத பெருமாள் கோபுரத்துக்குச் செல்லும் சாலையில் இடையூராக வளர்ந்துள்ள சீமைக்கருவேல முட்செடிகளை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே வடரெங்கம் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த ரெங்கநாதபெருமாள்கோயில் ராஜகோபுரம் உள்ளது. இந்த கோபுரம் கொள்ளிடம் ஆற்றின் வலதுகரையையொட்டி அமைந்துள்ளது.

இதனையொட்டி கொள்ளிடம் ஆற்றுக்குள் இறங்கிச் செல்லும் வகையில் படிக்கட்டுகளும் அமைந்துள்ளன. இந்த புராதான சின்னமாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் ராஜகோபுரத்தை வெளியூர்களிலிருந்தும் பலர் வந்து பார்த்த வண்ணம் இருந்து வருகின்றனர்.

உள்ளூரைச் சேர்ந்தவர்கள் தினந்தோறும் காலை மற்றும் மாலை ஆகிய இருவேளைகளிலும் ஆற்றுக்கு நீராடவும் கோயில் விழாக்களுக்கு தண்ணீர் எடுப்பதற்கும் இந்த சாலை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த சாலையின் இருபுறங்களிலும் சீமைக்கருவேல முட்செடிகள் நீண்டு வளர்ந்து சாலையை மூடிக்கொண்டுள்ளது. ராஜகோபுரத்தை பார்வையிடச் செல்வோர்களும் ஆற்றுக்குச் செல்வோர்களும் முள் செடிகளால் சிரமம் அடைகின்றனர். மேலும் ராஜகோபுரத்தைச் சுற்றிலும் சீமைக்கருவேல முட்செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. எனவே கோபுரத்துக்கு இடையூராகவும், போக்குவரத்துக்கு இடையூராகவும் வளர்ந்துள்ள கருவேல முட்செடிகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: