பல கட்ட சோதனைகளை மீறி விபரீதம்: திருப்பதி கோயிலில் பக்தர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிப்பு: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குள் பல்வேறு கட்ட சோதனைகளையும் மீறி பக்தர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் இலவச தரிசனத்திற்கு செல்லக்கூடிய வைகுண்டம் காம்ப்ளக்ஸ்-2 அருகே நேற்று முன்தினம் இரவு நீண்ட வரிசையில் ஏராளமான பக்தர்கள் காத்திருந்தனர்.  நண்பகல் 11 மணியவில் பக்தர் ஒருவர், தான் கையில் வைத்திருந்த  பெட்ரோல் பாட்டிலை திறந்து தன் மீது  திடீரென பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.  இதனால், வரிசையில் நின்றிருந்த பக்தர்கள் அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர்.

இதையறிந்த அதிகாரிகள், உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து பக்தரை மீட்டனர். பின்னர், அவரை ஆம்புலன்ஸ் மூலம் திருப்பதி ரூயா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கவலைக்கிடமான நிலையில் உள்ள அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  தற்கொலைக்கு முயன்ற அந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர், எதற்காக இவ்வாறு செய்தார் என்பது தெரியவில்லை. இதேபோல், கடந்த மாதம் ஏழுமலையான் கோயில் எதிரே சுவாமிக்கு அபிஷேகத்திற்காக பால் கொண்டு சென்றபோது லாரிக்கு அடியில் பாய்ந்து பக்தர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: