சிஏஏ சட்டத்தால் கருத்து வேறுபாடு நிதிஷ் கட்சியிலிருந்து பிரசாந்த், பவன் நீக்கம்

புதுடெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்தால் ஏற்பட்ட கருத்து வேறுபாடால், ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலிருந்து பிரசாந்த் கிஷோர் மற்றும் பவன் வர்மா இருவரையும் நிதிஷ் குமார் அதிரடியாக நீக்கியுள்ளார். பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் துணைத் தலைவராக பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் பதவி வகித்து வந்தார். மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே இவர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தார். ஆனால், அம்மாநில முதல்வரும், கட்சி தலைவருமான நிதிஷ் குமார் மத்திய அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டிருந்தார். இந்த விவகாரத்தால், நிதிஷ் குமார் பிரசாந்த் கிஷோர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதேபோல் கட்சியின் பொதுச் செயலாளர் பவன் வர்மாவும் சிஏஏவை எதிர்த்தார்.

இந்நிலையில், பிரசாந்த் கிஷோர், பவன் வர்மா ஆகிய இருவரையும் கட்சியில் இருந்து நீக்கி ஐக்கிய ஜனதா தளம் நேற்று அறிக்கை வெளியிட்டது. கட்சியின் தலைமை பொதுச் செயலாளர் கே.சி.தியாகி வெளியிட்ட அந்த அறிக்கையில், ‘‘பிரசாந்த் கிஷோர், பவன் வர்மா கட்சி விதிமுறையை பின்பற்ற விரும்பவில்லை என்பதால் அவர்களை கட்சியிலிருந்து நீக்குவது அவசியமாகி உள்ளது’’ என கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, பிரசாந்த் கிஷோர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘‘நன்றி நிதிஷ்குமார். தொடர்ந்து முதல்வர் பதவியில் நீடித்திருக்க இறைவன் ஆசிர்வதிக்கட்டும்’’ என்று கூறியுள்ளார்.

Related Stories: