தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது எடுத்த வீடியோ பத்திரமாக உள்ளது : ஐகோர்ட்டில் ஆணையம் உத்தரவாதம்

சென்னை: நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, வீடியோ பதிவு செய்ய கோரியும், முடிவுகள் அறிவிக்கப்படாத இடங்களில் முடிவுகள் அறிவிக்க கோரியும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி சத்யநாராயணன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, திமுக தரப்பில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ, வி.அருண், நீலகண்டன் ஆகியோர் ஆஜராகினர். மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ வாதிடும்போது, மறைமுக தேர்தல் நடத்தப்படாத 335 பதவிகளுக்கு வரும் 30ம் தேதி தேர்தல் நடத்துவது குறித்து மாநில தேர்தல் ஆணையம் கடந்த 21ம் தேதி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளபடி, நேர்மையாகவும், நியாயமாகவும் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் நான்கு வாக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஒரே பெட்டியில் போடப்படுவதால், குழப்பங்கள் ஏற்படுகிறது. எனவே, தனித்தனியாக பெட்டிகள் வைக்க கோரி தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்துள்ளோம்.

Advertising
Advertising

அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றார்.அப்போது, இந்த வழக்கில் இக்கோரிக்கை தொடர்பாக பரிசீலிக்க கூடாது என்று தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், ஆணையத்தின் வக்கீல் நெடுஞ்செழியன் ஆகியோர் ஆட்சேபம் தெரிவித்தனர்.அப்போது, நீதிபதி, வாக்கு எண்ணிக்கையின்போது பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் பாதுகாப்பாக உள்ளதா என்று கேட்டார். அதற்கு தேர்தல் ஆணைய வக்கீல் நெடுஞ்செழியன், வாக்கு எண்ணிக்கையின் போது பதிவு செய்யப்பட்ட வீடியோ பதிவுகள் பாதுகாப்பாக மாவட்ட கலெக்டர்களின்  கட்டுப்பாட்டில் உள்ளன. அவற்றில் முறைகேடுகள் செய்ய வாய்ப்பில்லை என்றார். இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க அவசியமில்லை எனக் கூறி வழக்கை முடித்து வைத்தார்.

Related Stories: