நாட்டை பிளவுப்படுத்தும் சர்ச்சை பேச்சுபீகாரில் பதுங்கியிருந்த சர்ஜில் இமாம் கைது

ஜெகனாபாத்: பீகார் மாநிலம், ஜெகனாபாத்தைச் சேர்ந்தவர் சர்ஜில் இமாம். மும்பை ஐஐடியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டம் பெற்ற இவர், டெல்லி ஜவகர்லால் நேரு (ஜேஎன்யு) பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக உள்ளார். இவர் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொண்டு சர்ச்சைக்குரிய வகையில் பேசி வந்தார். ‘குடியுரிமை சட்டத்தால் இந்தியாவிலிருந்து அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களை துண்டிப்போம்; அது நம் கடமை’ என அவர் பேசுவது போன்ற வீடியோக்கள் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இதனால், இவர் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், அசாம், உத்தரப் பிரதேசம், மணிப்பூர், அருணாச்சல பிரதேசம், டெல்லி உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்கு தொடரப்பட்டு, தலைமறைவான சர்ஜில் இமாம் தீவிரமாக தேடப்பட்டு வந்தார். இந்நிலையில், அவரது சொந்த கிராமமான ககோவுக்கு பீகார் போலீசார் நேற்று விரைந்தனர். அங்கு அவரது சகோதரரை பிடித்து விசாரித்ததில், சர்ஜில் இமாம் பதுங்கியிருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்ததாக பீகார் டிஜிபி குப்தேஸ்வர் பாண்டே தெரிவித்துள்ளார். அவர் பீகார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவாரா அல்லது டெல்லிக்கு அழைத்துச் செல்லப்படுவாரா என்பது குறித்து போலீஸ் தரப்பில் தகவல் வெளியிடப்படவில்லை.

* நிதிஷ் எச்சரிக்கை

சர்ஜில் இமாம் கைது குறித்து பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அளித்த பேட்டியில், ‘‘போராட்டம் நடத்த மக்களுக்கு முழு உரிமை உண்டு. அதே நேரம், நாட்டை பிளவுபடுத்தும் வகையில் யாரும் பேசக் கூடாது. சட்டப்படி போலீசார் தங்கள் கடமையை செய்துள்ளனர். இனி நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்கும்,’’ என்றார்.

Related Stories: