உத்திரமேரூர் அருகே பரபரப்பு பெரியார் சிலை உடைப்பு

சென்னை: உத்திரமேரூர் அருகே பெரியார் சிலை உடைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு பேசுகையில், ‘1971ம் ஆண்டு ராமர், சீதைக்கு அவமதிப்பு  ஏற்படுத்தியாக பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சில கருத்துகளை தெரிவித்தார். இதற்கு திராவிடர் கழகம், தந்தை பெரியார்  திராவிடர் கழகம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ‘ரஜினிகாந்த் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று வலியுறுத்தினர். ஆனால் நடிகர் ரஜினிகாந்த் வருத்தம் தெரிவிக்காமல், ‘பெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்’ என்று அறிவித்தார். அதைதொடர்ந்து, பெரியார் ஆதரவு  அமைப்புகள் சார்பில் போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிட்டு தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக திராவிடர் விடுதலை கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டதால், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், உத்திரமேரூர் அடுத்த கலியப்பேட்டை கிராமத்தில் பேருந்து நிலையம் அருகே பீடத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை நேற்று காலை உடைக்கப்பட்டது. அவ்வழியாக சென்ற பொதுமக்கள், இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் வேகமாக பரவியதால் ஏராளமானோர் திரண்டனர். பரபரப்பும் ஏற்பட்டது. தகவல் அறிந்து சாலவாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் பெரியார் சிலையின் முகம், மற்றும் கை பகுதியை வெள்ளை துணியால் சுற்றி மறைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிலையை உடைத்தது யார் என விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் உத்திரமேரூர் அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

* உடனடியாக கைது செய்ய வேண்டும்

உடைக்கப்பட்ட பெரியார் சிலையை போலீசாரே சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதிக்கு வந்த திராவிடர் கழக  காஞ்சி மாவட்ட செயலாளர் அசோகன் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி  மாவட்ட செயலாளர் பாசறை செல்வராஜ் தலைமையில் அக்கட்சியினர், மக்கள் மன்றத்தை சேர்ந்தவர்கள் உட்பட பலர் பேருந்து நிலையம் அருகே சிலையை உடைத்தவர்களை உடனடியாக கைது செய்யவேண்டும். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் பணியில் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தினர். இச்சம்பவத்தால் கலியப்பேட்டைபகுதி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: