சுரங்கப்பாதை அமைக்க எதிர்ப்பு: தாழையூத்தில் இன்று முழு கடையடைப்பு

தாழையூத்து: நெல்லை- மதுரை 4 வழிச்சாலை அமைக்கப்பட்ட பிறகு நெல்லை அடுத்த தாழையூத்து நகரானது இரு பகுதிகளாகப் பிரிந்தது. இதனால் அப்பகுதியில் அவ்வப்போது ஏற்படும் விபத்துகளால் உயிர் சேதமும்  ஏற்படுகிறது. முறையாகத் திட்டமிடாமல் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அமைத்த இச்சாலையில், இப்பகுதி மக்கள் ஒருபுறத்தில் இருந்து மற்றொரு புறத்தை கடப்பதற்கு எந்தவித வசதியும் செய்து  தரப்படவில்லை. இதனால் பொதுமக்கள், 4 வழிச்சாலையின் நடுவில் வைத்துள்ள தடுப்புகள், உடைந்திருக்கும் பகுதி வழியாக ஆபத்தான நிலையில் கடக்கின்றனர். இதனால் கடந்த 10 ஆண்டுகளாக நடந்துள்ள  விபத்தில் சுமார் 100 பேர் பரிதாபமாக இறந்தனர்.

இதனிடையே தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக சாலையில் பாலப்பணி துவங்கியது. பாலம் கட்டப்படுவதால் போக்குவரத்து எளிதாகும் என அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியில்  இருந்து வந்தனர்.இந்நிலையில் கடந்த 20ம் தேதி அங்கு வந்த நெடுஞ்சாலைத்துறையினர், பாலத்திற்குப் பதிலாக சுரங்கப் பாதை அமைப்பதற்கான ஆயத்த பணிகளில் இறங்கினர். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து  பாஜ முன்னாள் மாவட்டத் தலைவர் தயாசங்கர் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் திரண்டு  தொடர்ந்து 2 நாட்களாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சுரங்கம் அமைக்கும் பணி  நிறுத்தப்பட்டது. சுரங்கப்பாதையை நிரந்தரமாக நிறுத்தக் கோரி தாழையூத்தில் இன்று முழு கடையடைப்பு நடந்தது. அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Related Stories: