இன்று தை அமாவாசை நெல்லை, தூத்துக்குடி, தென்காசி நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

நெல்லை: நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் தை அமாவாசையொட்டி, நீர் நிலைகளில் ெபாதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். தை மாதத்தில் பொங்கல் பண்டிகையை அடுத்து வரும் தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகாளாய அமாவாசை ஆகியவை சிறப்பு வாய்ந்ததாகும். இந்த மூன்று அமாவாசை தினங்களில் நமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் படயல்  செய்து வழிபட்டு வந்தால் குடும்பம் நன்மை பெரும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

இன்று தை அமாவாசை தினத்தையொட்டி நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள பாபநாசம் பாபநாச சுவாமி கோயில், நெல்லையில் குறுக்குத்துறை சுப்பிரமணியர் கோயில், பேராத்து செல்வி அம்மன் கோயில்,  குட்டத்துறை சுப்பிரமணியர் கோயில், காட்டு ராமர் கோயில், ஜடாயு தீர்த்தம் உள்ளிட்ட தாமிரபரணி ஆற்றுப் படித்துறைகளில் திரளானவர்கள் தங்களது முன்னோர்களை நினைத்து நதியில் புனித நீராடினர்.

இதையடுத்து அந்தனர்களிடம் வெற்றிலை, பாக்கு தேங்காய் பழம் வைத்து சிறப்பு வழிபாட்டுக்கு பின்னர் தாமிரபரணி நதியில் எள்ளை தண்ணீரில் விட்டு முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்தனர். இதைத்தொடர்ந்து அந்ததந்த  பகுதிகளில் உள்ள கோயில்களுக்கு சென்று சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். இதுபோல் தென்காசி மாவட்டத்தில் குற்றாலத்தில் திரளானவர்கள் தை அமாவாசையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து காசி விஸ்வநாதர் கோயிலில் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். இதுபோல் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர்  கடற்கரை, தூத்துக்குடி துறைமுக பீச் கடற்கரை, ஏரல், ஆறுமுகநேரி, முக்காணி, செய்துங்கநல்லூர், வைகுண்டம் தாமிரபரணி நதிக்கரையில் திரளானவர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் அருகில் உள்ள கோயில்களில்  நடந்த சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்டனர். இதன் காரணமாக கோயில்களில் அதிகாலை முதல் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

Related Stories: