முக ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக்கட்சி கூட்டம்: காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட 11 கட்சிகள் பங்கேற்பு

சென்னை: திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் கடந்த செவ்வாய் கிழமை திமுக தலைமை செயற்குழு அவசரக்கூட்டம் நடந்தது. கூட்டம் முடிவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர், “ தேசிய குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை கண்டிக்கும் வகையில் என்ன நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்பதை 24ம் தேதி (இன்று) திமுக தலைமையில் இருக்கக்கூடிய அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி அதில் முடிவெடுத்து, அதை அறிவிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறோம்” என்றார்.

அதன்படி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொது செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்,

மனிதநேய  மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், இந்திய ஜனநாயக கட்சி நிறுவன தலைவர் பாரிவேந்தர் மற்றும் திமுக தோழமை கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டம்(சிஏஏ), தேசிய மக்கள் தொகை பதிவேடு(என்பிஆர்), தேசிய  குடிமக்கள் பதிவேடு(என்ஆர்சி) குறித்து விவாதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து இதனை கண்டிக்கும் வகையில் என்ன செய்யலாம் என்பது குறித்து கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. அநேகமாக இந்த சட்டங்களை கண்டித்து மாபெரும் போராட்டம் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் அனைத்து கட்சி கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Related Stories: