தேனி மாவட்ட ஆவின் தலைவராக ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா நியமனம் ரத்து: ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு

மதுரை: தேனி மாவட்ட ஆவின் தலைவராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டதை ரத்து செய்து ஐகோர்ட் கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம், பழனிசெட்டிப்பட்டியை சேர்ந்தவர் அமாவாசை. இவர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நான் பழனிசெட்டிப்பட்டி தொடக்க பால் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக உள்ளேன். கடந்த 2018, ஆக.22ம் தேதி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின்படி, மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் (ஆவின்) இருந்து பிரித்து, தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் தனியாக ஆரம்பிக்கப்பட்டது.

அந்த கூட்டுறவு சங்கத்தில் 4 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். தலைவர் மற்றும் நிர்வாகக்குழுவை தேர்வு செய்ய 17 உறுப்பினர்கள் தேவை என்பதால், மேலும் 13 உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்தெடுக்கப்பட வேண்டிய நிலை இருந்தது.

இதையடுத்து எவ்வித முன்னறிவிப்புமின்றி, தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் 17 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்தாண்டு செப்.2ம் தேதி பதவியேற்றனர். தற்போது தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவராக ஓ.ராஜா உள்ளார். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பலர் அதிமுகவைச் சேர்ந்தவர்கள். எனவே அவர்கள் செயல்பட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில், “17 உறுப்பினர்கள் நியமனம் தற்காலிகமானது. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்யவேண்டும்” என வாதிடப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் செயல்பட இடைக்கால தடை விதித்திருந்தனர். இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘ஆவின் விதிப்படி, தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படாததால், தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் ரத்து செய்யப்படுகிறது. ஆவின் ஆணையர் விதிகளை பின்பற்றி தற்காலிக குழுவையோ, நிரந்தர குழுவையோ அமைப்பது குறித்து முடிவு செய்யலாம்’’ என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Related Stories: