தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடக்க அஸ்திர யாகம் தொடங்கியது: 101 சிவாச்சாரியார்கள் பங்கேற்பு

தஞ்சை: தஞ்சை பெரிய கோயிலில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற வேண்டி அஸ்திர யாகம் நேற்று தொடங்கியது. இதில் 101 சிவாச்சாரியார்கள் பங்கேற்றனர். தஞ்சை பெரியகோயில் கும்பாபிஷேகம் பிப்ரவரி 5ம்தேதி நடக்கிறது. இதையொட்டி திருப்பணிகள் நடந்து வருகிறது. இதற்கான யாகசாலை பூஜை அடுத்த மாதம் 1ம் தேதி தொடங்குகிறது. கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெறவும், எவ்வித அசம்பாவிதமும் ஏற்படக்கூடாது என்பதற்காகவும் தஞ்சையை சுற்றி எட்டு திசைகளிலும் உள்ள காளியம்மன் கோயில்களிலும், புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலிலும் யாகம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, 9 கோயில்களில் சாந்திஹோமம் நடத்தப்பட்டு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. இதன்தொடர்ச்சியாக தஞ்சை பெரிய கோயிலில் உள்ள நடராஜர் சன்னதி முன் அஸ்திர யாகம் நேற்று காலை தொடங்கியது. இதையொட்டி காலையில் முதல் கால பூஜை, மாலை 4 மணிக்கு இரண்டாம் கால பூஜை நடந்தது. இன்று காலை 6 மணி முதல் பகல் 12.30 மணி வரை மூன்றாம் கால பூஜை நடக்கிறது. இந்த பூஜையில் சிவபெருமானின் 5 ஆயுதங்களான சிவாஸ்திரம், அகோர அஸ்திரம், பாசுபத அஸ்திரம், பிரத்தீங்கர அஸ்திரம், யோமாஸ்திரம் ஆகியவற்றை யாகத்தில் வைத்து அர்ச்சனை செய்யப்படுகிறது. இதில் 101 சிவாச்சாரியார்கள் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: