கந்தூரி விழாவையொட்டி நாகூர் தர்காவில் பாய்மரம் ஏற்றம்

நாகை: நாகூர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு வெளி மாவட்டம், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறும். இதன்படி இந்த ஆண்டு கந்தூரி விழா வருகிற 26 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு நாகூர் தர்காவில் உள்ள 5 மினராக்களிலும் பாய்மரங்கள் ஏற்றும் நிகழ்ச்சி இன்று அதிகாலை நடைபெற்றது. தர்கா கலிபா துவா ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

அதை தொடர்ந்து தஞ்சையை ஆட்சி செய்த மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிக்கொடுத்த பெரிய மினரா, தலைமாட்டு மினரா, ஓட்டு மினரா, முதுபக் மினரா உள்ளிட்ட 5 மினராக்களில் பாய்மரங்கள் ஏற்றப்பட்டது. இதில் தர்கா முன்னாள் ஆலோசனைக்குழு தலைவர் முகமது கலிபா சாஹிப் உள்பட திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.கந்தூரி விழாவையொட்டி தர்கா வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு காட்சியளிக்கிறது. அலங்கார வாசல், கால்மாட்டு பகுதி, பெரிய மினரா உள்ளிட்ட 5 மினராக்களும் வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது.

Related Stories: