நெற்குன்றத்தில் 3 லட்சம், 10 சவரன் நகை கொள்ளை ‘போலி’ வருமான வரி அதிகாரிகள் 2 பேர் திருநெல்வேலியில் சிக்கினர்

அண்ணாநகர்: சென்னை நெற்குன்றத்தில் வருமான வரி துறை அதிகாரி மற்றும் போலீஸ் என்று கூறி 3 லட்சம், 10 சவரன் நகைகளை கொள்ளையடித்த வழக்கில் தேடப்பட்ட 2 பேர் திருநெல்வேலியில் கைது செய்யப்பட்டனர். சென்னை மதுரவாயல் அடுத்த நெற்குன்றம், பல்லவன் நகர், பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் முகமது நூருல்லா (65). பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கறிக்கடை நடத்தி வருகிறார். கடந்த 13ம் தேதி இரவு இவரது வீட்டிற்கு காரில் வந்த 4 பேர் கும்பலில் 2 பேர் சபாரி உடையிலும், 2 பேர் போலீஸ் சீருடையிலும் வந்துள்ளனர். பின்னர் அவர்கள் அடையாள அட்டையை காட்டி வருமான வரித்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் என கூறியுள்ளனர். அப்போது அவர்கள், ‘‘நீங்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக புகார் வந்ததுள்ளது. உங்கள் வீட்டை சோதனை செய்ய வேண்டும்’’ என்று கூறி அவர்களிடமிருந்த செல்போன்களை பறித்தனர். மேலும் பீரோவில் இருந்த ₹3 லட்சத்து 10 ஆயிரம் மற்றும் 10 சவரன் நகைகளை எடுத்துக்கொண்டனர். மேலும் இதுகுறித்து வருமான வரித்துறை அலுவலகத்திற்கு நேரில் வந்து கையெழுத்து போட்டு பெற்று கொள்ளுமாறு கூறிவிட்டு அவசர அவசரமாக சென்றுவிட்டனர். அவர்கள் மீது முகமது நூருல்லாவுக்கு சந்தேகம் எழுந்ததால் கோயம்பேடு போலீசில் புகாரளித்தார். விசாரணையில் வருமான வரித்துறை அதிகாரிகள் யாரும் அங்கு வரவில்லை என்பது உறுதியானது.

Advertising
Advertising

இதையடுத்து கோயம்பேடு போலீசார் சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது 4 பேர் கும்பல் கொள்ளையடித்து கொண்டு காரில் ஏறி செல்வது தெரிய வந்தது. இந்த வீடியோ காட்சிகளை அடிப்படையாக வைத்து கொள்ளையர்களை அண்ணா நகர் துணை ஆணையர் முத்துசாமி தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் ஏற்கனவே வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து கொள்ளையடித்த கும்பல் புகைப்படங்களை ஆய்வு செய்ததில் திருநெல்வேலியில் இருந்து வந்து கொள்ளையடிப்பவர்கள் என்பது தெரிந்தது.

இதனடிப்படையில் தனிப்படை போலீசார் திருநெல்வேலிக்கு விரைந்து சென்று 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களை சென்னைக்கு அழைத்து வரும் பணியில் மும்முரமாக உள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்திய பின்னரே, உண்மை நிலவரம் தெரிய வரும் என போலீஸ் வட்டாரம் கூறுகிறது.

Related Stories: