காணும் பொங்கலையொட்டி கும்பக்கரை, கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

பெரியகுளம்: காணும் பொங்கலையொட்டி கும்பக்கரை அருவி, கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கொடைக்கானலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் சிரமத்திற்குள்ளாகினர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே 8 கி.மீ தொலைவில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கொடைக்கானல் மலையடிவாரத்தில் இயற்கை சூழலில் இந்த அருவி அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைவனப்பகுதி மற்றும் கொடைக்கானலில் பெய்யும் மழையால் இந்த அருவிக்கு நீர்வரத்து இருக்கும். கும்பக்கரை அருவி ரம்யமான இயற்கை சூழலில் அமைந்துள்ளதால் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது அருவியில் தண்ணீர் சீராக விழுகிறது. காணும் பொங்கலையொட்டி நேற்று சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது.

கொடைக்கானல் தமிழகம் முழுவதும் பொங்கல் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் காணும் பொங்கல் நாளான நேற்று கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் கொடைக்கானல் அனைத்து சுற்றுலா இடங்கள் மற்றும் நகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர். கொடைக்கானலில் தமிழக டிஜிபி திரிபாதி ஓய்வெடுத்து வரும் நிலையில் அவரது பாதுகாப்புக்காக கொடைக்கானல் வந்த போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர் இதனால் ஓரளவிற்கு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடிந்தது. அதிக சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்ததால் தங்கும் விடுதி உரிமையாளர்கள் கட்டணத்தை தாறுமாறாக உயர்த்தினர். ஒரு சாதாரண தங்கும் அறை 5 ஆயிரம் ரூபாய்க்கு வாடகைக்கு விடப்பட்டு வருகிறது. இந்த கட்டண கொள்ளையால் சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி அடைந்து வருகின்றனர்.

Related Stories: