டாப்சிலிப்பில் யானைகளுக்கு பொங்கல் விழா

*சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே டாப்சிலிப்பில் யானைகளுக்கு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர். பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட டாப்சிலிப் கோழிக்கமுத்தி மற்றும் சின்னார் முகாமில் 27 வளர்ப்பு யானை  வனத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. டாப்சிலிப்பில், வனம் மற்றும் வன விலங்குகளை பாதுகாப்பதின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் யானைகள் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான யானைகள் பொங்கல் விழா நேற்று டாப்சிலிப்பில் விமர்சையாக நடந்தது.

கோழிக்கமுத்தி முகாமில் உள்ள 27 யானைகளில், சின்னத்தம்பி யானை உள்பட 18  வளர்ப்பு யானைகள் டாப்சிலிப் பகுதியில் உள்ள மைதானத்திற்கு கொண்டுவரப்பட்டு, பின்னர் மலைவாழ் மக்கள் யானைகளுக்கு பூஜை செய்து, புதுப்பானையில் பொங்கல் வைத்து, யானைகளுக்கு பிடித்த கரும்பு, வாழை பழம், தேங்காய், வெள்ளம் உள்ளிட்ட உணவு வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து யானை ஊர்வலம் நடைபெற்றது. யானைகள் கூட்டமாக புல்மேட்டில் நடந்து வந்து அணிவகுத்து நின்று துதிக்கையை தூக்கி பிளீறி சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சியடைய செய்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுற்றுலா பயணிகள் மற்றும்  வனத்துறை ஊழியர்களின் குடும்பத்தினர் பலர் இணைந்து பொங்கல் வைத்தனர். இதில் டாப்சிலிப் ரேஞ்சர் சக்திவேல், பொள்ளாச்சி வனச்சரகர் காசிலிங்கம், ஸ்குவாட் ரேஞ்சர் மணிகண்டன் உள்ளிட்ட வனத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

தோழிகளுடன் விளையாடிய சின்னத்தம்பி

கோவை தடாகம் சுற்றுப்பகுதிகளில் அட்டகாசம் செய்து பிடிக்கப்பட்ட சின்னத்தம்பி யானைக்கு கடந்த 6 மாதங்களாக வரகளியாறு முகாமில் வளர்ப்பு யானையாக மாற்ற பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.

பாகன்களுக்கு கட்டுப்பட்ட சின்னத்தம்பி யானை நேற்று யானை பொங்கலுக்காக டாப்சிலிப் வந்தது. அப்போது தனது தோழிகளான சிவகாமி மற்றும் செல்வி ஆகிய இரு யானைகளை விட்டு பிரியாமல் விளையாடி கொண்டிருந்தது. இதைக்கண்ட சுற்றுலா பயணிகள் செல்போன்களில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

அரிசி ராஜாவுக்கு சிறப்பு பொங்கல்

பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் அட்டகாசம் செய்து வந்த அரிசி ராஜா காட்டு யானை வனத்துறையால் பிடிக்கப்பட்டு வரகளியாறு முகாமில் வளர்ப்பு யானையாக மாற்ற பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதற்கு பாதுகாப்பாக மாரியப்பன் உள்ளிட்ட யானைகள் வரகளியாறு முகாமில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த யானைகளுக்கு சிறப்பு பொங்கல் வைக்கப்பட்டு, பூஜை நடத்தப்பட்டு கரும்பு, உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.

Related Stories: