களைகட்டிய காணும் பொங்கல் சுற்றுலா தலங்களில் மக்கள் உற்சாக கொண்டாட்டம்

நெல்லை:  நெல்ைல, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் சுற்றுலா தலங்களில் குடும்பத்தினருடன் குவிந்த பொதுமக்கள், காணும் பொங்கலை  உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை தொடர்ந்து காணும் பொங்கல் விழா, நேற்று கொண்டாடப்பட்டது.  வருணபகவானின் கருணையால் இந்தாண்டு மழை பொழிந்து விவசாயம் செழித்திருந்ததால், காணும் பொங்கல் கொண்டாட்டங்கள் களைகட்டியது.  பொதுமக்கள் குடும்பத்தினருடன் சுற்றுலா தலங்களுக்கு சென்று பொழுதை கழித்து மகிழ்ந்தனர். நெல்லை மாவட்டத்தில் பாபநாசம் தலையணை,  அகஸ்தியர் அருவி, பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் மற்றும் சொரிமுத்து அய்யனார் கோயில்உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம்  அலைமோதியது.

உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து குவிந்த மக்கள், அகஸ்தியர் அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். தாங்கள் கொண்டு வந்த உணவை  அருவிப்பகுதியில் குடும்பத்தினருடன் அமர்ந்து சாப்பிட்டனர். மலைப்பகுதியில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் சாரை சாரையாக அணிவகுத்ததால்  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.பாபநாசம் வனச்சோதனை சாவடியில் வனவர் மோகன் தலைமையில் வனத்துறையினர், அனைத்து  வாகனங்களிலும் பிளாஸ்டிக் பொருட்கள், மதுபாட்டில்கள் கொண்டு செல்கின்றனரா? என சோதனையிட்டனர். இதில் பதுக்கி எடுத்துச் செல்லப்பட்ட  மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வனத்துறையினரின் சோதனை காரணமாக பாபநாசம் சோதனை சாவடியில்  இருந்து திருவள்ளுவர் கல்லூரி வரை வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவியில் குறைவாக விழுந்த தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். பின்னர்  அருகிலுள்ள பூங்காக்களுக்கு சென்று குழந்தைகளுடன் உணவருந்தி விளையாடி உற்சாகத்தை வெளிப்படுத்தினர். களக்காடு புலிகள் காப்பக  மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள தலையணையில் காணும் பொங்கல் கொண்டாட நேற்று காலை முதலே சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம்  இருந்தனர். மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள், தீப்பெட்டி, கத்தி போன்ற ஆயுதங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. எனவே  வனத்துறை சோதனை சாவடியில் சுற்றுலா பயணிகளிடம் கடும் சோதனை நடத்தப்பட்டு, தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

உள்ளூர் மட்டுமின்றி திருச்செந்தூர், தூத்துக்குடி, நாகர்கோவில், நெல்லை, ஓசூர் மற்றும் வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் வந்திருந்தனர்.  ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்ததால் தலையணையில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமே தென்பட்டது. அவர்கள் பச்சையாற்றில்  உற்சாக குளியல் போட்டு காணும் பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். மேலும் அவர்கள் வனப்பகுதியில் ஆங்காங்கே குடும்பத்தினர்களுடன்  கூட்டம், கூட்டமாக அமர்ந்து உணவருந்தினர். புதிதாக அமைக்கப்பட்ட பூங்காவில் சிறுவர்கள் உற்சாகத்துடன் விளையாடி மகிழ்ந்தனர். சுற்றுலா  பயணிகள் வசதிக்காக தற்காலிக வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டு இருந்தது. இதேபோல எந்தாண்டும் இல்லாத வகையில் கழிவறை, குடிநீர்  வசதி, உடை மாற்றும் அறைகள் உள்பட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.  காணும் பொங்கலை முன்னிட்டு களக்காடு புலிகள் காப்பக கள  இயக்குநரும், தலைமை வன பாதுகாவலருமான கயாரத் மோகன் தாஸ் உத்தரவின் பேரில் களக்காடு துணை இயக்குநர் ஆரோக்கியராஜ் சேவியர்  ஆலோசனைப்படி வனசரகர்கள் புகழேந்தி, பாலாஜி முன்னிலையில் வனத்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

ஆற்றுப்பகுதியில் அசம்பாவிதங்களை தடுக்க ரோந்து பணியில் ஈடுபட்டனர். களக்காடு போலீசாரும் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.  இதேபோல் களக்காடு தேங்காய் உருளி அருவி, பச்சையாறு அணை, அகலிகை சாபம் தீர்த்த அய்யன் சாஸ்தா கோயில், திருக்குறுங்குடி நம்பி  கோயில், கொடுமுடியாறு அணை பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம், கூட்டமாக திரண்டு காணும் பொங்கலை கொண்டாடினர். நெல்லையிலும்  தாமிரபரணி ஆற்றங்கரை பகுதிகளில் கரும்பு, பனங்கிழங்கு மற்றும் பொங்கல் உணவுடன் பொதுமக்கள் குவிந்தனர். நெல்லை கொக்கிரகுளம்  அறிவியல் மையத்தில் ஒரே நாளில் 5 ஆயிரம் பேர் திரண்டனர். அவர்கள் சறுக்கல் உள்ளிட்ட விளையாட்டுகளில் ஈடுபட்டு பொழுதுபோக்கினர்.தூத்துக்குடியில் முயல்தீவு, துறைமுக கடற்கரை, கோவங்காடு கோவளம் கடற்கரை, முத்துநகர் கடற்கரை, தாளமுத்துநகர், வேம்பார் உள்ளிட்ட  கடற்கரை, வைப்பாற்று படுகை ஆகிய பகுதிகளில் ஏராளமானோர் குவிந்தனர். ராஜாஜி பூங்கா, நேரு பூங்கா, ரோச் பூங்கா, டூவிபுரம் பூங்கா ஆகிய  இடங்களில் கரும்பு, பனங்கிழங்கு உள்ளிட்ட உணவுப் பொருட்களுடன் பொதுமக்கள் குவிந்திருந்தனர்.

பாஞ்சாலங்குறிச்சி கோட்டை, திருச்செந்தூர் கடற்கரை, மணப்பாடு, குலசேகரன்பட்டினம் கடற்கரை, அருஞ்சுனைகாத்த அய்யனார் கோயில் சுனை,  மருதூர் அணைக்கட்டு, வல்லநாடு நீர்த்தேக்கம், மருதூர் அணை, ஆழ்வார்தோப்பு, தென்திருப்பேரை, தாமிரபரணி ஆற்றுப்படுகை, வைகுண்டம்,  முறப்பநாடு, கலியாவூர் ஆற்றுப்படுகைகள், எட்டயபுரம் பாரதி நினைவகம், ஆதிச்சநல்லூர், கருங்குளம், கொங்கராயகுறிச்சி பகுதிகள், முறப்பநாடு,  பக்கபட்டி, வைப்பாறு ஆகிய இடங்களிலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் திரண்டனர். அங்கு அவர்கள் உணவருந்தி,  விளையாடி மகிழ்ந்து பொழுது போக்கினர். முயல்தீவு செல்வதற்காக தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு டவுன் பஸ்கள்  இயக்கப்பட்டன. கடற்கரை மற்றும் பூங்காக்களையொட்டி பிளாட்பார கடைகள் முளைத்திருந்தன.

Related Stories: