தாராசுரம் காய்கறி மார்க்கெட்டில் ஒரே நாளில் 1,000 டன் காய்கறி ரூ.30 கோடி மதிப்பில் விற்பனை

கும்பகோணம்: பொங்கல் பண்டிகையையொட்டி காய்கறிகள் வாங்குவதற்கு கும்பகோணம் அடுத்த தாராசுரம் காய்கறி மார்க்கெட்டில் ஏராளமான மக்கள் குவிந்தனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 1,000 டன் காய்கறிகள் ரூ.30 கோடிக்கு விற்பனையானது. தை பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் புதுப்பானையில் பொங்கலிட்டு வழிபாடு நடத்துவர். அப்போது சர்க்கரை மற்றும் வெண் பொங்கல் வைத்து அதற்கென்று 11 வகை காய்கறிகளால் சாம்பார் வைத்து படையிலிடுவர். 

பொங்கல் விழாவன்று தேவைப்படும் காய்கறிகளை வாங்குவதற்காக கும்பகோணம் அடுத்த தாராசுரம் காய்கறி மார்க்கெட்டுக்கு நேற்று அதிகாலை முதல் பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்தனர். தாராசுரம் காய்கறி மார்க்கெட்டுக்கு காய்கறிகளை வாங்குவதற்காக ஜெயங்கொண்டம், அரியலூர், ஆண்டிமடம், காரைக்கால், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் குவிந்தனர். இதில் அதிகளவில் மொச்சைக்காய், அவரைக்காய், முருங்கைகாய், வாழை இலை, கரும்பு, வாழைப்பழம், இஞ்சி, மஞ்சள் கொத்துகள் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளை வாங்கினர்.

பொங்கல் பண்டிகையையொட்டி மொச்சை, அவரைக்காய், வாழை இலை, வாழைப்பழம் உள்ளிட்டவகள் அனைத்தும் 1,000 டன் வரை விற்பனையானது. இதனால் ரூ.30 கோடிக்கு மேல் விற்பனை நடந்துள்ளது என வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். காய்கறிகளின் விலை கடும் உயர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: