இதுவரை 95% பேருக்கு வழங்கப்பட்ட நிலையில் பொங்கல் பரிசு வழங்கும் தேதி வரும் 21ம்தேதி வரை நீட்டிப்பு: தமிழக அரசு திடீர் உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு திட்டம், 1000 ரொக்கம் வழங்குவது நேற்றுடன் முடிவடையும் என்று அறிவித்த நிலையில், வருகிற 21ம் தேதி வரை வழங்க அரசு திடீரென உத்தரவிட்டுள்ளது. இதுவரை 95 சதவீதம் பேர் பணம் வாங்கியுள்ளனர். பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் பச்சரிசி 1 கிலோ, சர்க்கரை 1 கிலோ, 2 அடி நீள கரும்பு துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 ரொக்க பணம் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதன்படி, தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் கடந்த 9ம் தேதியில் இருந்து 13ம் தேதி (நேற்று) வரை பொங்கல் பரிசு மற்றும் 1000 ரொக்கப்பணம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அறிவித்தபடி, ரேஷன் கடை ஊழியர்கள் கடந்த 5 நாட்களாக பொங்கல் பரிசு திட்டம் மற்றும் 1000 ரொக்கப்பணம் வழங்கி வந்தனர். முதல் மூன்று நாட்கள் ரேஷன் கடைகளில் அதிக அளவில் கூட்டம் இருந்தது. கடந்த 2 நாட்களாக குறைவான அளவே கூட்டம் இருந்தது.

இந்நிலையில் தமிழக உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்கள், அனைத்து மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கு நேற்று ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறி இருப்பதாவது:பொங்கல் பண்டிகைக்காக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 ரொக்கப்பணம் கடந்த 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை விநியோகம் செய்யப்படவேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது. இந்த திட்டத்தை அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களும் பெற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு வருகிற 21ம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது. விடுபட்ட அட்டைதாரர்கள் ரேஷன் கடை வேலை நாட்களில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கப்பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர்கள் கூறுகையில், ‘இதுவரை 95 சதவீதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது’ என்றனர். தமிழக அரசு அறிவித்துள்ள இந்த திட்டத்தின் மூலம் 2.5 கோடி அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். இதற்காக, தமிழக அரசு 2,363 கோடி நிதியும்  ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: