தேசிய குடிமக்கள் பதிவேடு தேவையற்றது: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கருத்து

பாட்னா: நாடு தழுவிய அளவில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்துவது தேவையற்ற ஒன்றாகும் என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். பீகார் சட்டப்பேரவையில் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு அடுத்த 10 ஆண்டுகளுக்கு இடஒதுக்கீடு வழங்கும் அரசியலமைப்பு திருத்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், ‘‘பாஜ.வுடன் கூட்டணி வைத்துள்ள முதல்வர் நிதிஷ்குமார் சிஏஏ, தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றில் அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து தெளிவுப்படுத்த வேண்டும்’’ என வலியுறுத்தினார்கள். இதனைத் தொடர்ந்த பதில் அளித்து பேசிய முதல்வர் நிதிஷ்குமார், ஒருமனதாக ஆதரவு அளித்த அவை உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

தொடர்ந்து நிதிஷ்குமார் பேசுகையில், “குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகிய விவகாரம் தொடர்பாக நாட்டில் பெரும் கொந்தளிப்பு நிலவி வருகின்றது. முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி அரசின்போது கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியின்படி தேசிய குடிமக்கள் பதிவேடனானது அசாமுக்கு மட்டுமே பொருந்தும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்துவது அவசியமற்றது மற்றும் நியாயமற்றது. இதுபோன்ற ஏதாவது நடக்கும் என நாங்கள் நினைக்கவில்லை. பிரதமர் மோடியும் கூட இது தொடர்பாக தெளிவாக பேசியுள்ளார்” என்றார்.

Related Stories: