பாஜ தலைவர் ஜெய் பகவான் கோயல் எழுதிய சத்ரபதி சிவாஜியுடன் பிரதமர் மோடியை ஒப்பிடும் புத்தகத்தை தடை செய்ய வேண்டும்: சஞ்சய் ராவுத் கோரிக்கை

மும்பை: மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியுடன் பிரதமர் நரேந்திர மோடியை ஒப்பிடும் புத்தகத்தை தடை செய்ய வேண்டும் என்று சிவசேனா தலைவர் சஞ்சய் ராவுத் கோரியுள்ளார். டெல்லியில் நேற்று முன்தினம் பாஜ அலுவலகத்தில் “இன்றைய சிவாஜி: நரேந்திர மோடி” என்ற தலைப்பில் புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டது. பாஜ தலைவர்களில் ஒருவரான ஜெய் பகவான் கோயல் இந்த புத்தகத்தை எழுதி இருக்கிறார். இந்நிகழ்ச்சியில் நூலாசிரியர் ஜெய் பகவான் கோயல், டெல்லி பாஜ தலைவர் மனோஜ் திவாரி, அக்கட்சியின் தேசிய துணைத் தலைவர் ஷியாம் ஜாஜூ முன்னாள் எம்.பி. மகேஷ் கிரி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் இந்த புத்தகம் பற்றி ஜெய் பகவான் கோயல் பதிவிட்டிருந்தார். இதையடுத்து இந்த புத்தகத்தை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். மகாராஷ்டிராவில் இந்த புத்தகம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவுத் இந்த புத்தகம் குறித்து நிருபர்களிடம் கூறியதாவது: சத்ரபதி சிவாஜியை வேறு யாருடனும் ஒப்பிடுவதை ஏற்க முடியாது. பிரதமரை சந்தோஷப்படுத்தி காரியத்தை சாதித்துக் கொள்ள சிலர் மேற்கொண்ட முயற்சியாக இது இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் சிவாஜியை அவருடன் ஒப்பிடுவதை ஏற்க இயலாது.

சத்ரபதி சிவாஜியின் வாரிசுகளான மாநிலங்களவை எம்.பி. சம்பாஜி ராஜே மற்றும் முன்னாள் சத்தாரா தொகுதி எம்.பி. உதயன்ராஜே போசலே ஆகியோர் பாஜ.வில் உள்ளனர். சத்ரபதி சிவாஜியை பிரதமர் மோடியுடன் ஒப்பிட்டதை ஏற்கிறார்களா என்பதை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும். இந்த புத்தகத்துக்காக அவர்கள் பாஜ.வை விட்டு விலக வேண்டும். ஜெய் பகவான் கோயல் எழுதிய இந்த புத்தகத்தை உடனே தடை செய்ய வேண்டும். அது சத்ரபதி சிவாஜியை அவமதிப்பதாக இருக்கிறது. இவ்வாறு சஞ்சய் ராவுத் அந்த பேட்டியின்போது கூறினார். இதற்கிடையே, தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேந்த மாநில அமைச்சர்கள் சகன் புஜ்பால் மற்றும் ஜிதேந்திர ஆவாத், மூத்த காங்கிரஸ் தலைவர் சுஷில்குமார் ஷிண்டே ஆகியோரும் இந்த புத்தகத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

* தொடர்பு இல்லை பாஜ அறிவிப்பு

பாஜ ஊடகப் பிரிவின் இணை பொறுப்பாளர் சஞ்சய் மாயூக் கூறியதாவது:

சில சமூகத்தினரால் ஏற்றுக் கொள்ள முடியாத, சர்ச்சைக்குரிய பகுதிகளை புத்தகத்தில் இருந்து நீக்குவதற்கு புத்தகத்தின் ஆசிரியரும் பாஜ உறுப்பினருமான ஜெய் பகவான் கோயல் ஒப்பு கொண்டுள்ளார். இது தவிர, மராட்டிய மன்னர் சிவாஜியுடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டது ஆசிரியரின்  தனிப்பட்ட கருத்து. அதற்கும் பாஜ.வுக்கும் எந்த தொடர்பும்  இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதற்கிடையே, புத்தக ஆசிரியர் கோயல் அளித்த பேட்டியில், ‘‘என்னுடைய கருத்து யாருடைய உணர்வையும் புண்படுத்தி இருந்தால் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். சர்ச்சைக்குரிய பிழைகளை திருத்தம் செய்வதற்கு தயாராக இருக்கிறேன்’’ என்று கூறினார்.

Related Stories: