வெள்ளம், வறட்சி பாதிப்பின்போது கர்நாடகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்த நிதி குறித்து பகிரங்க விவாதத்திற்கு தயாரா?

பாகல்கோட்டை: வறட்சி, மழை பாதிப்பு காலங்களில் கர்நாடகாவுக்கு பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு ஒதுக்கீடு செய்த நிதி குறித்து பகிரங்க விவாதம் நடத்த தயாரா என்று மாஜி முதல்வர் சித்தராமையாவுக்கு துணை முதல்வர் கோவிந்த் கார்ஜோள் சவால் விடுத்துள்ளார். கர்நாடகாவில் மழை பாதிப்புக்கு தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை என்று முன்னாள் முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டியிருந்தார். இவருக்கு பதில் அளிக்கும் வகையில் நேற்று பாகல்கோட்டையில் துணை முதல்வர் கோவிந்த்கார்ஜோள் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த ஆறு ஆண்டுகளில் மழை வெள்ள பாதிப்பு மற்றும் வறட்சி காலங்களில் கர்நாடகாவுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கி உள்ளது.

இது குறித்து வெளிப்படையான விவாதம் நடத்த சித்தராமையா தயாரா?. வெள்ளம் மற்றும் வறட்சி பாதிப்பு போன்ற காலங்களில் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்வது வழக்கமான ஒன்று. ஆனால், கர்நாடகாவில் கடந்த முறை வறட்சி மற்றும் வெள்ள பாதிப்பின் போது பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு கர்நாடக அரசு எதிர்பார்த்ததை விட அதிக அளவில் நிவாரண நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஜவஹர்லால் நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, நரசிம்மராவ், மன்மோகன்சிங் ஆகியோர் காலத்தில் வெள்ளம் மற்றும் வறட்சி பாதிப்பின் போது எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது. தற்போது மத்தியில் ஆளும் பாஜ அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். வாய்க்கு வந்தபடி மத்திய அரசையும், பிரதமர் நரேந்திரமோடியையும் பேசிக்கொண்டிருக்கும் சித்தராமையா, ஏதாவது பேசி மக்களை திசைதிருப்ப பார்க்கலாம் என முயற்சிப்பதை கைவிட வேண்டும் என்றார்.      

Related Stories: