NRC, NPR பலரின் குடியுரிமையை பறிக்கும்; CAA தொடர்பாக மக்களின் கருத்தை பிரதமர் கேட்க வேண்டும்...ப.சிதம்பரம் பேட்டி

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி உயர் தளங்களில் இருந்து அமைதியான பார்வையாளர்களிடம் மட்டுமே பேசுகிறார் என ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். கொல்கத்தா துறைமுக கழக 150ம் ஆண்டு நிறைவு விழா மற்றும் புதுப்பிக்கப்பட்ட பாரம்பரியமிக்க கட்டிடங்களை அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி ஆகியவற்றில் பங்கேற்பதற்காக 2 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் கொல்கத்தா சென்றார். விவேகானந்தர் பிறந்த தினம் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அங்கு நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் பேசியதாவது: குடியுரிமை திருத்த சட்டம் பற்றி இளைஞர்கள் இடையே பல கேள்விகள் உள்ளன. சிலர் வதந்திகளால் தவறாக வழி நடத்தப்படுகின்றனர்.

குடியுரிமை திருத்த சட்டம், யாருடைய குடியுரிமையையும் பறிப்பது அல்ல. இது குடியுரிமை வழங்கும் சட்டம். மதரீதியிலான துன்புறத்தல்களை சந்திப்பவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கு தேசத் தந்தை மகாத்மா காந்தியே ஆதரவாக இருந்துள்ளார். சுதந்திர போராட்ட வீரர்களின் விருப்பங்களைதான் தான் எனது அரசு செய்து வருகிறது. மகாத்மா காந்தி பல ஆண்டுகளக்கு முன் கூறியதை நாங்கள் நிறைவேற்றி இருக்கிறோம்.

குடியுரிமை திருத்த சட்டத்தை தெளிவாக புரிந்து கொண்டும், சிலர் அரசியல் நோக்கத்துக்காக வேண்டும் என்றே வதந்தியை பரப்புகின்றனர். கடந்த 70 ஆண்டுகளாக சிறுபான்மையினரை ஏன் துன்புறுத்தினோம் என பாகிஸ்தான்தான் தற்போது பதில் அளிக்க வேண்டும். பாகிஸ்தானில் மனித உரிமை முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டம் பாகிஸ்தானில் உள்ள மதரீதியிலான துன்புறுத்தல் பற்றிய விழிப்புணர்வை உலகம் அறியச் செய்துள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்தால் வடகிழக்கு மாநிலங்களின் கலாச்சாரம், பண்பாடு, மக்கள் தொகை ஆகியவற்றில் எந்த பாதிப்பும் ஏற்படாது.

5 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய இளைஞர்களிடையே ஏமாற்றம் நிலவியது. தற்போது அந்த நிலை மாறியுள்ளது. இந்தியாவில் மட்டும் அல்ல, இந்த உலகமே இந்திய இளைஞர்களிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறது. அவர்கள் சவால்களுக்கு சவால் விடுக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார். இந்நிலையில், பிரதமர் மோடி பேச்சுக்கு குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், குடியுரிமை சட்டத்திருத்தம் என்பது குடியுரிமையை வழங்குவதாகும் அதை எடுத்துச் செல்லக்கூடாது என பிரதமர் கூறுகிறார் என்றார்.

மேலும், என்பிஆர், என்ஆர்சி போன்றவை பலரை குடிமக்கள் அல்லாதவர்கள் என்று அறிவித்து குடியுரிமையை பறிக்கும் வகையில் உள்ளது. மக்களின் கருத்துகளை கேட்டு குடியுரிமை சட்டத்திருத்தம் தொடர்பாக பிரதமர் முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். விமர்சனங்களை எதிர்கொள்ள பிரதமர் மோடி தயாராகவும் இல்லை, விமர்சகர்களுக்கு அவரை சந்திக்கவும் வாய்ப்பு கிடைப்பதில்லை. ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் எழுப்பும் கேள்விகளை எதிர்கொள்ள பிரதமர் தயாராக இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Related Stories: