முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கேரள அரசுடன் பேச்சு நடத்த கூடாது: தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையுடன் தமிழக அரசின் ஒப்புதல் கடிதத்தையும் இணைத்து தாக்கல் செய்தால் மட்டுமே, முல்லைப்பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்க முடியும் என்றும், அவ்வாறு தாக்கல் செய்யப்படாத சூழலில் புதிய அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி அளிக்க முடியாது என்றும் மத்திய அரசு கூறிவிட்டது. அதனால் வேறு வழியே இல்லாத சூழலில், முல்லைப்பெரியாறு அணை குறித்து தமிழகத்துடன் பேச்சு நடத்தப்போவதாக கேரள நீர்ப்பாசனத்துறையின் தலைமைப் பொறியாளர் கே.எச். சம்சுதீன் கூறியுள்ளார். 123 ஆண்டுகள் பழமையான முல்லைப்பெரியாறு அணை வலுவிழந்து விட்டதால், அதற்கு மாற்றாக புதிய அணை கட்ட வேண்டியதன் தேவையை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்றும் சம்சுதீன் கூறியுள்ளார்.

இவை அனைத்தும் தேனில் தோய்த்தெடுத்த நச்சு வார்த்தைகள். இவற்றை நம்பக்கூடாது. முல்லைப்பெரியாறு அணை மிகவும் வலிமையாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்பட்டால், நீர்த்தேக்கப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள சொகுசு விடுதிகள் மூழ்கிவிடும் என்பதால் தான், அந்த முயற்சியை தடுக்கும் நோக்குடன் புதிய அணை கட்ட கேரள அரசு திட்டமிடுகிறது. எனவே, முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட அனுமதிப்பது குறித்து கேரள அரசுடன் எந்த காலத்திலும் பேச்சு நடத்த மாட்டோம் என்பதை தமிழக ஆட்சியாளர்கள் உறுதிபட அறிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: