உச்சக்கட்ட குளிர் காரமணாக வடமாநிலங்கள் கடும் பாதிப்பு: ஹிமாச்சல், டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் இயல்பு வாழ்க்கை முடக்கம்!

புதுடெல்லி: உச்சக்கட்ட குளிர் காரணமாக ஹிமாச்சல பிரதேசம், காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஹிமாச்சல பிரதேசத்தில் கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இரவில் குளிர் வாட்டி வருகிறது. வெப்பத்தின் அளவு மைனஸ் டிகிரிக்கு சென்றதால் பல இடங்களில் பனிப்படலம் காணப்படுகிறது. தலைநகர் சிம்லா முழுவதும் பனியால் சூழப்பட்டுள்ளது. ஹிமாச்சல பிரதேசத்தில் மலைகளில் சிக்கிக்கொண்ட சுற்றுலா பயணிகள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். காஷ்மீரில் பூஞ்ச் உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் பனிப்பாறைகள் காணப்படுகிறது. இதனை சுற்றுலா பயணிகள் மிகவும் ரசித்து விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்லி, சண்டிகர் உள்ளிட்ட நகரங்களில் வெப்பத்தின் அளவு 5 டிகிரிக்கு கீழே சென்றதால் இரவு நேரத்தில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சாலைகளில் மூடுபனி காணப்படுவதால் வாகன ஓட்டிகள் ஆங்காங்கே சிக்கிக்கொண்டு அவதியடைந்து வருகின்றனர். முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களை இயக்கும் நிலை காணப்பட்டது. மேலும், குறைந்த காண்புதிறன், பனிமூட்டம் ஆகியவற்றின் காரணமாக ரயில்களின் வருகை மற்றும் புறப்பாட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளது. டெல்லி மட்டுமல்லாது அதனை சுற்றியுள்ள பகுதிகளான நொய்டா, காசியாபாத், ஃபரிதாபாத், குருகிராம் மற்றும் பல வட இந்திய மாநிலங்களில் கடும் குளிரால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: