ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு பிப்ரவரி 24ம் தேதி வரை தடை நீட்டிப்பு

புதுடெல்லி : ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு விவகாரத்தில் ஓய்வு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கு பிப்ரவரி 24ம் தேதி வரை மேலும் தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆணையம்:   

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 75 நாட்களுக்குப் பின்னர் சிகிச்சை பலனின்றி 2016 டிசம்பர் 5ம் தேதி காலமானார். இதையடுத்து உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரிகள், ஜெயலலிதா வீட்டில் பணிபுரிந்தவர்கள், சசிகலா அவரின் குடும்பத்தார், ஜெயலலிதாவுக்கு  சிகிச்சை அளித்த அப்போலோ மருத்துவர்கள், மற்ற மருத்துவர்கள், அரசு அதிகாரிகள், அப்போலோ செவிலியர்கள், அமைச்சர்கள், சுகாதாரத்துறை செயலர், தமிழக முன்னாள் தலைமை செயலாளர்கள் என்று பல்வேறு தரப்பிடமும் ஆணையம் விசாரணை மேற்கொண்டது. ஆனால் இந்த ஆணையத்தின் விசாரணை மாறுபட்ட கோணத்தில் செல்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டும் அவர் நேரில் ஆஜராகவில்லை.இதனால் ஆணையம் ஒருதலை பட்சமாக செயல்படுவதாக பல தரப்பிலும் கூறப்பட்டது.

அப்போலோ நிர்வாகம் வழக்கு:

இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு அப்போலோவில் வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து  மருத்துவ நிபுணர்கள் குழு இல்லாமல் ஆணையம் விசாரிக்க கூடாது. மருத்துவ சிகிச்சைகள் குறித்து விசாரிக்க வேண்டுமென்றால் 21  மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழு ஒன்றை அமைக்க வேண்டும். அதுவரை  மருத்துவ சிகிச்சை  குறித்து விசாரணை மேற்கொள்ள ஆறுமுகச்சாமி ஆணையத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று அப்பல்லோ மருத்துவமனை  உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.  ஆனால் மனுவை பரிசீலனை செய்த சென்னை உயர்நீதிமன்றம் முகாந்திரம் இல்லை எனக்கூறி அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு:

இதற்கிடையே, மருத்துவ குழு அமைக்கக் கோரிய வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து அப்போலோ நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஆறுமுகசாமி ஆணையத்திற்கு இடைக்கால தடை விதித்து பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தது.

 இந்த நிலையில் இவ்வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் குபதா மற்றும் அனிருத்தா போஸ் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை தவிர அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிந்து விட்டதாக ஆறுமுகசாமி ஆணையத்தின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து ஆறுமுகசாமி ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை உச்சநீதிமன்றம் பிப்ரவரி 24ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.

Related Stories: