அமெரிக்கா - ஈரான் போர் பதற்றம் எதிரொலி; அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிராக வாக்கெடுப்பு நடத்த முடிவு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் நடவடிக்கைகள் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளதாக அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி தெரிவித்துள்ளார். ஈரானுக்கு எதிராக டொனால்டு ட்ரம்பின் ராணுவ நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படையின் குத்ஸ் பிரிவு தளபதி காஸ்சிம் சுலைமானி கடந்த வெள்ளிக்கிழமை பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க படை நடத்திய டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட இத்தாக்குதல், ஈரானுக்கு கடும் ஆத்திரமூட்டி உள்ளது. அமெரிக்காவை பழி வாங்கியே தீருவோம் என அந்நாட்டின் உச்ச தலைவர் காமேனெய் மிரட்டல் விடுத்திருந்தார். அதே சமயம், ஈராக்கில் உள்ள அமெரிக்க படையினர் உடனடியாக வெளியேற வேண்டுமென அந்நாட்டு அரசு அறிவித்தது. ஆனால், அமெரிக்க ராணுவம் வெளியேறவில்லை. சுலைமானி மறைவுக்கு 3 நாள் துக்கம் அனுசரிக்கப்பட்டு நேற்று முன்தினம் அவரது உடல் ஈரானில் அடக்கம் செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து உடனடியாக ஈரான் பழி வாங்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது. நேற்று அதிகாலை அந்நாட்டு ராணுவம் ஈராக்கின் இர்பில், அல் அஸ்சாத் பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இரு தளங்களிலும் 22 ஏவுகணைகள் வீசப்பட்டதாகவும், இதில் 80 அமெரிக்க வீரர்கள் பலியாகி விட்டதாகவும் ஈரான் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரான் ஏவுகணை தாக்குதலில், அமெரிக்க வீரர்கள் 80 பேர் பலியானதாக தகவல் வெளியான நிலையில், ‘‘யாரும் பலியாகவில்லை’’ என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் தூதரங்கள் உள்ள பகுதியில் மீண்டும் ஏவுகனை தாக்குதல் நடத்தப்பட்டது மீண்டும் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தன்னிச்சையாக போர் தொடுத்த அதிபர் ட்ரம்பிற்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தை குறைக்கும் வகையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்படும் என்று அமெரிக்க நாடாளுமன்றத்தின் சபாநாயகர் நான்ஸி பெலோசி கூறியுள்ளார். இது தொடர்பாக நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவை உறுப்பினர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், அமெரிக்க மக்களின் பாதுகாப்பு முக்கியம் என்று கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்திய பிறகு, முடிவுகள் எடுக்காமல் அதிபர் ட்ரம்ப் தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பதாக நான்சி கூறியுள்ளார்.

Related Stories: