நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட உபி.யில் இருந்து சிறை ஊழியர் 2 பேரை அனுப்ப கோரிக்கை : திகார் சிறை நிர்வாகம் தகவல்

புதுடெல்லி: மருத்துவ மாணவி நிர்பயா கொலை வழக்கில், குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற, உபி.யில் இருந்து 2 தூக்கிலிடுபவர்களை அனுப்பக் கோரி திகார் சிறை நிர்வாகம் அம்மாநில அரசுக்கு கடிதம் அனுப்ப உள்ளது. டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கடந்த 2012 டிசம்பர் 16ம் தேதி ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, சாலையில் தூக்கி வீசப்பட்டார். அதன் பின்னர் சிகிச்சை பலன் அளிக்காமல் டிசம்பர் 29ம் தேதி உயிரிழந்தார்.

இந்த கொலை வழக்கில் எஞ்சியிருக்கும் குற்றவாளிகளான முகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா, அக்‌ஷய் குமார் சிங் ஆகியோரது மரண தண்டனையை வரும் 22ம் தேதி காலை 7 மணிக்கு நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை நிறைவேற்ற உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த தூக்கிலிடுபவரை அழைக்க திகார் சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக திகார் சிறை நிர்வாகத்தின் மூத்த அதிகாரி கூறுகையில், ``நிர்பயா குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற இரண்டு தூக்கிலிடுபவர்கள் வேண்டுமென உத்தரப் பிரதேச மாநில சிறைத் துறைக்கு வியாழக்கிழமை கடிதம் அனுப்பப்பட உள்ளது. முன்னதாக, கடந்த மாதம் உபி சிறை துறைக்கு அனுப்பிய கடிதத்தில், மீரட் சிறையில் உள்ள தூக்கிலிடுபவரை அனுப்ப கோரிக்கை விடுக்கப்பட்டது’’ என்று கூறினார்.

Related Stories: