‘தேர்தல் வாக்குறுதிப்படி எத்தனை டாஸ்மாக் கடைகளை குறைத்தீர்கள்?’

சென்னை: தேர்தல் வாக்குறுதிப்படி எத்தனை டாஸ்மாக் கடைகளை குறைத்தீர்கள் என்பது குறித்து பேரவையில் காரசார விவாதம் நடந்தது. தமிழக சட்டப் பேரவையில் நேற்று கவர்னர் உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு காரைக்குடி உறுப்பினர் கே.ஆர்.ராமசாமி (காங்கிரஸ்) பேசியதாவது: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை படிப்படியாக அகற்றி விடுவோம் என்று தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தீர்கள். இதுவரை எத்தனை கடைகளை குறைத்தீர்கள். அமைச்சர் தங்கமணி: தமிழகத்தில் கடந்த 2016ம் ஆண்டில் 6764 டாஸ்மாக் கடைகள் இருந்தன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 500 கடைகளையும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி 500 கடைகளையும் குறைத்தார். 5764 கடைகளாக குறைந்த நிலையில், தற்போது 5500 கடைகள் இருக்கிறது. மொத்தமாக மூடினால் கள்ளச்சாராயம் பெருகிவிடும். இதனால் அரசுக்கு இழப்பு ஏற்படும் என்பதால் படிப்படியாக மூடி

வருகிறோம்.

கே.ஆர்.ராமசாமி: மதுபானத்தை தடுக்க தமிழகத்தில் என்ன வழி இருக்கிறது என்று தான் பார்க்க வேண்டும். இந்த 4 ஆண்டுகளில் முன்பு இருந்ததை விட மதுபான விற்பனை பல மடங்கு உயர்ந்துள்ளது. முதல்வர் எடப்பாடி: இதுபற்றி அமைச்சர் தங்கமணி ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளார். புதுச்சேரியில் மதுபான விற்பனை அதிகரித்துள்ளது. காங்கிரசின் கொள்கை என்பது மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுமா? அமைச்சர் தங்கமணி: மதுவிற்பனை அதிகரித்துள்ளதாக கூறுகிறீர்கள். அது மதுபானத்தின் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் கிடைத்தது. தற்போதுள்ள 5500 கடைகளில் 2500 பார்கள் மட்டுமே உள்ளன. பார்களை படிப்படியாக குறைத்து வருகிறோம். அதேபோன்று டாஸ்மாக் கடைகளும் குறைக்கப்படும். கே.ஆர்.ராமசாமி: காங்கிரஸ் கொள்கைகளை பற்றி பேசுகிறீர்கள். நாங்கள் எப்போதும் ஒரே கொள்கை கொண்டவர்கள். நீங்கள் திடீரென எவரெஸ்ட் சிகரத்துக்கு ஏறினாலும் எங்கள் கொள்கையிலிருந்து மாற மாட்டோம்.இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

Related Stories: