இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை சாத்தியம் : அமைச்சர் விளக்கம்

சென்னை: இலங்கை தமிழருக்கு இரட்டை குடியுரிமை சாத்தியம்தான் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் பாண்டியராஜன் விளக்கம் அளித்துள்ளர். சட்டப்பேரவையில் கவர்னர் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தேசிய மக்கள் பதிவேட்டை தயாரிக்கக்கூடிய பணி குறித்து ஆளுநர் உரையில் இடம் பெறவில்லை. குடியுரிமை சட்டம் சொல்லாமல் இருப்பதால் இந்த அறிக்கை பய அறிக்கை என்றுதான் சொல்ல வேண்டும். இரட்டைக் குடியுரிமை என்று திரும்பத் திரும்ப நீங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். ஆளுநர் உரையிலும் அதை இடம்பெற வைத்துள்ளீர்கள்.

இதன் சாத்தியக் கூறுகள் பற்றி இந்த அரசு சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்திருக்கிறதா, இந்தப் பிரச்னை குறித்து சென்னைப் பல்கலைக் கழகத்தின் குற்றவியல் ஆய்வாளர் இளம்பரிதி, இரட்டை குடியுரிமை வழங்குவது தொடர்பாக இந்திய சட்டம் அனுமதி அளிப்பதில்லை என்று கூறியுள்ளார். இந்திய சட்டத்தில் இடமில்லாதபட்சத்தில் இரட்டை குடியுரிமை வழங்குவது சாத்தியம் இல்லை. அமைச்சர் பாண்டியராஜன் :ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டினருக்கு இரட்டை குடியுரிமை வழங்குவதற்கு அந்த இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் போடப்பட வேண்டும். அதன்படி இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 4 நாடுகளுக்கு இடையே மத்திய அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது. அதேபோன்று இந்தியா- இலங்கைக்கு இடையே இரட்டை குடியுரிமை தொடர்பாக ஒப்பந்தம் போடவேண்டும். அப்படி ஒப்பந்தம் செய்து கொண்டால் இரட்டை குடியுரிமை வழங்குவது சாத்தியம் தான்.

Related Stories: