டி.எஸ்பி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு உதவி கமிஷனர் உள்பட 4 அதிகாரிகள் கோர்ட்டில் ரகசிய வாக்குமூலம்: விசாரணை நாளை ஒத்திவைப்பு

கோவை: திருச்செங்கோடு டி.எஸ்பி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் உதவி கமிஷனர் உள்பட 4 அதிகாரிகள் கோவை கோர்ட்டில் ரகசிய வாக்குமூலம் அளித்தனர். இதைத்தொடர்ந்து விசாரணை 9ம் தேதிக்கு (நாளை) ஒத்திவைக்கப்பட்டது.  நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் டி.எஸ்பி.யாக பணியாற்றி வந்த விஷ்ணுபிரியா கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி தனது முகாம் அலுவலகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டதாக அப்போது புகார் எழுந்தது. இந்நிலையில், விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் குற்றவாளிகள் யாரும் இல்லை எனவும், இந்த வழக்கை கைவிடுவதாகவும் கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிஐ கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வழக்கை மீண்டும் விசாரிக்கக்கோரியும் விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

 கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் மனுவை விசாரித்து, சிபிஐ தனது விசாரணையை தொடரவும், அறிக்கையில் எழுந்துள்ள சந்தேகங்களில் 14 இடங்களை சுட்டிக்காட்டி அதற்கு பதில் அளிக்கவும், 6 மாதத்தில் விசாரணை முடித்து அறிக்கை தாக்கல் செய்யவும் 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரவிட்டது. விசாரணை முடித்து 2வது அறிக்கையை சிபிஐ கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி தாக்கல் செய்தது. அதில், டி.எஸ்பி. விஷ்ணுபிரியா தற்கொலையில் யாருடைய தூண்டுதலும் இல்லை எனவும், அறிக்கையை ஏற்றுக்கொள்ளும்படியும் குறிப்பிடப்பட்டிருந்தது. மீண்டும் விசாரிக்காமல், பழைய விசாரணை அறிக்கையினை தாக்கல் செய்ததுடன், குறிப்பிட்ட 7 பேரிடம் ஏன் விசாரிக்கவில்லை? என சிபிஐயின் 2வது அறிக்கைக்கு டி.எஸ்பி. விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது, 7 பேரிடம் மீண்டும் விசாரிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என சிபிஐ தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.

 இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம், மறு புலன் விசாரணை நடத்த விஷ்ணுபிரியாவின் தந்தை அளித்த மனுவை தனி புகாராக எடுத்துக்கொண்டு, நீதிமன்றமே விசாரணை நடத்தும் என்று தெரிவித்தது. இதையடுத்து, கடந்த நவம்பர் மாதம் நீதிமன்ற விசாரணை துவக்கப்பட்டது. உயிரிழந்த டி.எஸ்பி. விஷ்ணுபிரியா தந்தை ரவி, தாய் கலைச்செல்வி, நாமக்கல் மாவட்டத்தில் டி.எஸ்பி.யாக பணியாற்றி, தற்போது, சென்னை கூடுதல் எஸ்பி.யாக பணிபுரியும் சேவியர் பிரான்சிஸ் பெஸ்கி ஆகியோர் ஏற்கனவே நீதிபதி முன்பு ஆஜராகி ரகசிய வாக்குமூலம் அளித்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது விஷ்ணுபிரியா தோழியான சென்னையில் உதவி கமிஷனராக உள்ள மகேஷ்வரி, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டான் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரலேகா, திருவாரூர் டி.எஸ்பி. இனிகோ திவ்யன், ஓய்வுபெற்ற டி.எஸ்பி. முத்தமிழ் முதல்வன் ஆகியோர் ஆஜராகி ரகசிய வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து விசாரணையை, வரும் 9ம் தேதிக்கு (நாளை) நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார். நாளை இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: