பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி சுமுகமாக நடப்பதை உறுதி செய்ய வேண்டும்: கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு

மதுரை:  மதுரை மாவட்டம், பாலமேடு அம்பேத்கர் உறவின்முறை தலைவர் சந்தானம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘பாலமேட்டில் ஆண்டுதோறும் தை 2ம் நாள் ஜல்லிக்கட்டு நடைபெறும். இந்த ஆண்டும்  வழக்கம்போல ஜன. 16ல் ஜல்லிக்கட்டு நடக்கவுள்ளது. இதற்கான விழா குழுவில் குறிப்பிட்ட சமூகத்தினரான எங்களுக்கு வாய்ப்பில்லை. ஆனால், எங்களிடம் நன்கொடை பெறப்படுகிறது. ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் நாங்கள் தொடர்ந்து  பங்கேற்கிறோம். எனவே, பாலமேடு ஜல்லிக்கட்டு விழாக்குழுவில் எங்கள் சமூகத்தினரும் பங்கேற்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி,  டி.ரவீந்திரன் ஆகியோர் மனு குறித்து கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை 4 வாரம் தள்ளிவைத்தனர். மேலும், பாலமேடு ஜல்லிக்கட்டு சுமுகமாக நடைபெறுவதை கலெக்டர் உறுதிப்படுத்த வேண்டுமென  உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: