அசாம் அரசுப் பள்ளிகளில் 3 லட்சம் ‘பேய் மாணவர்கள்’: காங்கிரஸ் மீது முதல்வர் சோனோவால் புகார்

கவுகாத்தி: அசாம் மாநில அரசுப் பள்ளிகளில் 3 லட்சம் மாணவர்கள் படிப்பதாக போலி கணக்கு காட்டி, முந்தைய காங்கிரஸ் அரசு நிதி மோசடியில் ஈடுபட்டதாக இம்மாநில முதல்வர் சர்பானந்த சோனோவால் குற்றம் சாட்டியுள்ளார்.

அசாமில் முதல்வர் சர்பானந்த சோனோவால் தலைமையிலான பாஜ ஆட்சி நடக்கிறது. இங்கு தொடக்கப்பள்ளி, மேல்நிலைப் பள்ளி, ஆசிரியர் கல்வித் துறை ஆகியவை அடங்கிய `சமக்ரா சிக்‌ஷா அபியான்’ திட்டம் நடைமுறையில் உள்ளது.  இத்திட்டத்தின் ஆய்வுக் கூட்டம்  சோனோவால் தலைமையில் கவுகாத்தியில் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது, கடந்த 2016-17ம் கல்வியாண்டில் மாநிலம் முழுவதிலும் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 49  லட்சமாக இருந்தது. இது, கடந்த 2018-19ம் ஆண்டில், 46 லட்சமாக குறைந்தது, முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில், அரசுப் பள்ளிகளில் படிப்பதாக 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் பெயர்கள் கூடுதலாக பதிவேட்டில் இடம் பெற்றிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, பாடப் புத்தகங்கள், மதிய உணவு, பள்ளிச்  சீருடை ஆகியவற்றை, 3 லட்சம் இல்லாத மாணவர்களுக்கு வழங்கியதாக கணக்கு காட்டி, பொதுமக்களின் வரிப் பணத்தை கையாடல் செய்துள்ளதாக முந்தைய காங்கிரஸ் ஆட்சி மீது முதல்வர் சோனோவால் குற்றம் சாட்டியுள்ளார். இந்த நிதி  மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

Related Stories: