அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்க கோரிக்கை

உடுமலை: உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் இருந்து திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.கடந்த ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி பழைய ஆயக்கட்டு பாசன பகுதிக்கு ஆற்றிலும், புதிய ஆயக்கட்டு பாசன பகுதிக்கு பிரதான கால்வாயிலும் மற்றும் கல்லாபுரம், ராமகுளம் வாய்க்கால்களிலும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.உரிய இடைவெளிவிட்டு தண்ணீர் வழங்கப்பட்டு, நவம்பர் 27ம் தேதி தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. மொத்தம் 3 ஆயிரம் மில்லியன் கனஅடி நீர் திறக்கப்பட்டது.

90 அடி உயரம் கொண்ட அமராவதி அணையில் நேற்றைய நிலவரப்படி 69 அடிக்கு நீர்மட்டம் உள்ளது. பிரதான கால்வாய் பகுதியில் நெல், கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகள், தற்போது உயிர் தண்ணீர் விடும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.தண்ணீர் திறக்காவிட்டால் நெற்பயிர் கருகிவிடும். எனவே, தண்ணீர் திறக்க அரசுக்கு கருத்துரு அனுப்ப வேண்டும் என பொதுப்பணித்துறையினரை விவசாயிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Stories: