சென்னை ஏர்போர்ட்- கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் 15.3 கி.மீ. தூரம் நீட்டிப்பு

கவர்னர் உரையில் கூறியிருப்பதாவது: ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் ரூ.6,448 கோடியில் சென்னை-கன்னியாகுமரி தொழில் வழித்தடத்தினால் பயனடையக்கூடிய பகுதியில் சாலைத் தொடரமைப்பை தரம் உயர்த்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமையின் நிதியுதவியுடன் ரூ.2,673.42 கோடி மதிப்பீட்டில், எண்ணூர் துறைமுகத்திலிருந்து தச்சூர் வரையிலான சென்னை வெளிவட்டச் சுற்றுச் சாலை திட்டத்தின் முதற்கட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இச்சாலையின் மீதமுள்ள பகுதிகளுக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.

* நாளொன்றுக்கு 1.63 கோடி பயணிகள் மாநிலப் போக்குவரத்து கழகப் பேருந்துகளில் பயணம் மேற்கொள்கின்றனர். இந்த பொதுப் போக்குவரத்துப் பயணிப்பின் பங்கை மேலும் அதிகரிப்பதில் அரசு உறுதியாக உள்ளது. இந்திய அரசின் FAME-11 திட்டம் மற்றும் ஜெர்மன் வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன், மாநிலப் போக்குவரத்துக் கழகங்கள் மின்சார வாகனங்களை பெருமளவில் இயக்க உள்ளன.

* சென்னை மெட்ரோ ரயில் வேகமாக வளர்ந்து, சென்னை மாநகருக்குப் பெருமை சேர்க்கின்றது. 45 கிலோ மீட்டர் நீளத்திற்கான சென்னை மெட்ரோ ரயிலின் முதற்கட்டம் முழுமையாக முடிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. திருவொற்றியூர் -விம்கோ நகர் வரையிலான முதற்கட்டத்தின் நீட்டிப்புப் பணிகள் 2020ம் ஆண்டின் மத்தியில் நிறைவடையும். மேலும் ரூ.69,180 கோடி செலவில் 118.9 கிலோ மீட்டர் நீளத்திற்கு மூன்று வழித்தடங்களை அமைக்கும் 2ம் கட்ட திட்டப் பணிகளைச் செயல்படுத்த அரசு ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது.

சாத்தியக்கூறு ஆய்வின் அடிப்படையில், சென்னை விமான நிலையத்திலிருந்து, புதிய புறநகர் பேருந்து நிலையம் அமையவிருக்கும் கிளாம்பாக்கம் வரையிலான 15.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு, மெட்ரோ ரயில் வழித்தடத்தை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது. தாம்பரம்-வேளச்சேரி வழித்தடத்தில் ஏற்படும் அதிகமான போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதற்கு, 15.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரயில் போக்குவரத்து முறை ஒன்றினை அரசு அமைக்கும். இதற்கான விரிவான சாத்தியக்கூறு மற்றும் திட்ட அறிக்கை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தயாரிக்கும்.  பல்வேறு போக்குவரத்து முறைகளை ஒருங்கிணைத்து, மக்களுக்கு தடையற்ற போக்குவரத்தினை வழங்குவதை ஒரு முக்கிய இலக்காக இத்திட்டம் கொண்டுள்ளது.

* 5 லட்சம் பேருக்கு பென்ஷன்

தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் மூத்த குடிமக்களின் விகிதாச்சாரம் உயர்ந்து வருகிறது. மாதம் ஒன்றுக்கு 1,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கிடும் ஐந்து சமூகப்பாதுகாப்புத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. நடப்பாண்டு முதல், தகுதி வாய்ந்த மேலும் 5 லட்சம் நபர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

9 மருத்துவக்கல்லூரிகள் எப்போது?

* ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, திண்டுக்கல், நாமக்கல், திருப்பூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 9 புதிய மருத்துவக்கல்லூரிகளை நிறுவுவதற்கான பணிகள் ரூ.3,267.25 கோடியில் இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளன.

* அண்ணா பல்கலைக்கழகத்தை ஒப்புயர்வு உயர்கல்வி நிறுவனமாக இந்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது. அண்ணா பல்கலை, மாநிலச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட மாநில பொதுப் பல்கலையாக இருக்கும் காரணத்தால், ஒப்புயர்வு உயர்கல்வி நிறுவனம் என்ற தகுதி நிலையை அடைந்த பின்னரும் கூட, தொடர்ந்து மாநிலச் சட்டத்தின் கீழ் இயங்கும். மாநில இட ஒதுக்கீட்டுக்கொள்கை தொடர்ந்து அதற்குப் பொருந்தும் என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

Related Stories: