நிலுவையில் இருக்கும் வழக்கை திவால் நடவடிக்கைக்கு எதிராக மல்லையா பயன்படுத்த முடியாது : உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

புதுடெல்லி:  தன் மீதான திவால் நடவடிக்கையை நிறுத்தி வைப்பதற்காக, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கை விஜய் மல்லையா காரணம் காட்ட முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொதுத் துறை வங்களில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்ற விஜய் மல்லையா அதனை திருப்பி செலுத்த முடியாமல் லண்டன் தப்பிச் சென்றார். விஜய் மல்லையாவிற்கு எதிராக திவால் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி மல்லையாவிற்கு கடன் கொடுத்த வங்கிகள் குழு நீதிமன்றத்தை அணுகியுள்ளன. இந்நிலையில், மல்லையாவின் சொத்துக்கள் மற்றும் உறவினர்களின் சொத்துக்களை பறிமுதல் ெசய்வதற்கு தடை விதிக்கக் கோரி கடந்த ஜூன் 27ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் அவர்களின் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் திவால் நடவடிக்கை வழக்கின் தீர்ப்பை நிறுத்திவைக்க வேண்டும் என மல்லையா நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.

இது தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வில் நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு தரப்பில், ‘‘நிலுவையில் உள்ள வழக்கை சாதகமாக பயன்படுத்தி, இங்கிலாந்து நீதிமன்றத்தில் திவால் நடவடிக்கை வழக்கின் தீர்ப்பை நிறுத்தி வைக்க மல்லையா முயற்சிக்கிறார்’’ என்று குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவில், ‘‘விஜய் மல்லையா உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை திவால் நடவடிக்கையை தொடங்குவதற்கு எதிராக பயன்படுத்த முடியாது’’ என்றது. இதனால் விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு தடை இல்லை என்று தெரியவந்துள்ளது.

Related Stories: