அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் தன்னிச்சையாக ஆசிரியர்களை நியமிக்க முடியாது

* மேற்குவங்க வழக்கில் சுப்ரீம் கோர்ட் முக்கிய தீர்ப்பு

* மாநில அரசு நியமித்த ஆணைக்குழுவுக்கு அதிகாரம்

புதுடில்லி: ‘‘மேற்கு வங்கத்தில் சிறுபான்மையினர் நடத்தும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் தன்னிச்சையாக ஆசிரியர்களை நியமிக்க முடியாது’’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. மேற்குவங்க மாநில அரசின் சார்பில், மேற்குவங்க மதரஸா சர்வீஸ் கமிஷன் சட்டம் - 2008 கொண்டு வரப்பட்டு, ஒரு ஆணைக் குழு உருவாக்கப்பட்டது. அதன்படி, அரசின் நிதியுதவி பெற்று நடத்தப்படும் மதரஸா பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்கும்போது, மாநில அரசால் உருவாக்கப்பட்ட ஆணைக்குழு பரிந்துரைக்கும் நபர்களையே ஆசிரியர்களாக நியமிக்க முடியும். இதற்கு சில மதரஸா பள்ளி நிர்வாகங்கள் எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.  அதில், ‘மேற்குவங்க மதரஸா சர்வீஸ் கமிஷன் சட்டம் - 2008’ அரசியலமைப்பிற்கு முரணானது. அனைத்து சிறுபான்மையினருக்கும் தங்களுக்கு விருப்பமான கல்வி நிறுவனங்களை நிறுவுவதற்கும், நிர்வகிப்பதற்கும் உள்ள உரிமையை மீறுவதாக உள்ளது. எனவே அந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘‘அனைத்து சிறுபான்மையினருக்கும் தங்களுக்கு விருப்பமான கல்வி நிறுவனங்களை நிறுவுவதற்கும், நிர்வகிப்பதற்கும் உரிமை உண்டு’’ என்று கடந்த 2017ல் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து, புதிய சட்டத்தின்படி நியமிக்கப்பட்ட ஆசிரியர்களால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘‘அரசின் நிதியை பெற்றுக் கொண்டு மதரஸா தங்கள் விருப்பத்தின்படி செயல்பட முடியாது’’ என்று கோரப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், இறுதி உத்தரவு வரும் வரை ஆசிரியர்களை பணியில் இருந்து நீக்க வேண்டாம் என்று மாநில அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், இவ்வழக்கால், 2,600க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப முடியாமல் இருந்த நிலையில், மே 2018ல் உச்ச நீதிமன்றம் மேற்கண்ட பணியிடங்களை நிரப்ப அனுமதி அளித்தது. இந்நிலையில், இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பளித்தது. கொல்கத்தா உயர்  நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்த நீதிபதிகள், ‘‘மேற்குவங்க மதரஸா சர்வீஸ்  கமிஷன் சட்டம் செல்லும். இதன்படி நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள்  நியமனமும் செல்லும்.

மேற்கு வங்க மதரஸா சர்வீஸ் கமிஷன் சட்டப்படி அமைக்கப்பட்ட குழுவில் கல்வித்துறை நிபுணர்கள் அடங்கியுள்ளனர். தகுதித் தேர்வு நடத்தி, திறமையான ஆசிரியர்களை அவர்கள் நியாயமான முறையில் தேர்வு செய்கின்றனர். மேற்கு வங்க மதரஸா சர்வீஸ் கமிஷன் சட்ட விதிமுறைகள், சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களின் உரிமைகளுக்கு எதிரானது இல்லை. திறமை அடிப்படையில் சிறந்த ஆசிரியர்களை சர்வீஸ் கமிஷன்  தேர்வு செய்வது நாட்டு நலனையும், சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களின் நலனையும் திருப்தி படுத்தும். உயர் நீதிமன்ற தீர்ப்புக்குப்பின் சம்பந்தப்பட்ட மதரஸாக்கள் ஆசிரியர்களை நியமித்திருந்தால், அதுவும் செல்லும். ஆனால், இனிமேல், ஆசிரியர்களை நியமிக்கும் அதிகாரம் மேற்குவங்க மதரஸா சர்வீஸ் கமினுஷனுக்கு மட்டுமே உள்ளது’’ என கூறினர்.

Related Stories: