கொல்லம் அருகே வீடு இல்லாதவர்களுக்கு ஒரு ஏக்கர் நிலம் வழங்கிய தமிழக தொழிலதிபர்: தன்னை வாழ வைத்தவர்களுக்கு செய்த கைமாறு

திருவனந்தபுரம்: கொல்லம் அருகே தன்னை வாழ வைத்தவர்களுக்கு கைமாறு செய்யும் வகையில், வீடு இல்லாதவர்களுக்கு நிலம் வழங்கிய தமிழக முதியவரின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்தவர் மணி என்ற அப்துல்லா(60). இவர் கடந்த 1982ல் பிழைப்பு தேடி கேரள மாநிலம் வந்தார். கொல்லம் அருகே கடைக்கல் என்ற இடத்தில் ஒரு நிலக்கடலை விற்பனை செய்யும் கடையில் வேலைக்கு சேர்ந்தார். அடுத்த ஒரு சில ஆண்டுகளில் அவர் தனியாக தொழில் தொடங்க தீர்மானித்தார்.

பின்னர் தள்ளுவண்டியில் வைத்து நிலக்கடலை வியாபாரம் செய்ய தொடங்கினார். அயராத உழைப்பினால் அவரது வியாபாரம் நாளடைவில் நல்ல வளர்ச்சி அடைந்தது. இதையடுத்து அவர் கடைக்கல் சந்திப்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பல்பொருள் அங்காடி கடையை தொடங்கினார். கையில் நல்ல காசு புரளத் தொடங்கியது. இந்த நிலையில் தனது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த மக்களுக்கு அவர் கைமாறு செய்ய விரும்பினார். இதைத்தொடர்ந்து கடைக்கல் பஞ்சாயத்து தலைவர் பிஜூவை அணுகிய அவர், தனது விருப்பம் குறித்து தெரிவித்தார். மேலும் அந்த பஞ்சாயத்து பகுதியில் வீடு இல்லாதவர்களுக்கு நிலம் வழங்க தீர்மானித்தார்.

இதற்காக அருகில் கோட்டபுரம் என்ற பகுதியில் ரூ.10 லட்சம் செலவில் ஒரு ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கினார். அந்த நிலத்தை பஞ்சாயத்திடம் ஒப்படைக்க அப்துல்லா தீர்மானித்துள்ளார். அந்த இடத்தில் வீடு இல்லாத 87 பேருக்கு  அடுக்குமாடி குடியிருப்பு கட்டிக்கொடுக்க பஞ்சாயத்தும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் அடுத்தவாரம் முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் நடக்கும் விழாவில், நிலத்துக்கான ஆவணங்களை அரசிடம் வழங்க அப்துல்லா தீர்மானித்துள்ளார். அதன்பிறகு அங்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு 87 வீடு இல்லாத ஏழைகள் குடியேறுவார்கள்.

Related Stories: