தமிழகத்தில் நுழையும் போராட்டம் ஓசூர் அருகே திரண்ட கன்னட அமைப்பினர்: இருமாநில போலீஸ் குவிப்பால் பரபரப்பு

ஓசூர்: ஓசூர் அருகே தமிழக எல்லை பகுதியில் கர்நாடக மாநில கொடியுடன் நுழையும் போராட்டத்தில் கன்னட அமைப்புகள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கடந்த மாதம் கர்நாடக மாநில கொடியை டெம்போ டிராவலரில் கட்டிக் கொண்டு கர்நாடகாவை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சிலர் தமிழகத்திற்குள் வந்தனர். 10 அடி உயரத்திற்கு கொடி கட்டி வந்த அவர்களை கிருஷ்ணகிரி மற்றும் கோவையில்  போலீசார் தடுத்து நிறுத்தி, அதிக உயரத்திற்கு கொடி கட்டி செல்ல வேண்டாம் என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், அவர்களை தமிழக போலீசார் தாக்கியதாக கூறி நேற்று கன்னட அமைப்புகளான கர்நாடக ரக்சன வேதிகே, கன்னட ஜாக்ருதி வேதிகே உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் டூவீலரில் கர்நாடக கொடிகளை  கட்டிக்கொண்டு,

 தமிழகத்தில் நுழையும் போராட்டம் நடத்தினர். இதில், 100க்கும் மேற்பட்டோர் டூவீலரில் நெலமங்கலம் பகுதியில் இருந்து வெள்ளிவாட் சாலை, தமிழக-கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி வழியாக ஓசூர் ஜூஜூவாடிக்குள்  நுழையும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த 100க்கும் மேற்பட்ட கர்நாடக போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், சம்பந்தப்பட்ட போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்  என தெரிவித்தனர். இந்த போராட்டத்தால், தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கு தமிழக-கர்நாடக எல்லையில் இரு மாநில போலீசாரும் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: