மேலாண் இயக்குனர் தலைமையில் நாளை டாஸ்மாக் மேலாளர்கள் கூட்டம்

சென்னை: டாஸ்மாக் பார் நடவடிக்கைகள் குறித்து மேலாண்மை இயக்குனர் தலைமையில் மாவட்ட மேலாளர்கள் கூட்டம் நாளை சென்னையில் நடைபெற உள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் சட்டத்துக்கு புறம்பான பார்களை கட்டுப்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, கடந்த ஆண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட சட்டத்துக்கு புறம்பான பார்கள் மூடி சீல் வைக்கப்பட்டது. இதேபோல், அரசு அனுமதி பெற்ற பார்களின் எண்ணிக்கை 1,944 இல் இருந்து 3,197 ஆக  கடந்த ஆண்டு உயர்த்தப்பட்டது. கடந்த ஆண்டு மட்டும் புதிதாக 1,253 புதிய பார்கள் நிறுவப்பட்டது.

இந்தநிலையில், இந்த ஆண்டு சட்டத்துக்கு புறம்பான டாஸ்மாக் பார்களை தடுக்கும் வகையிலும், அனுமதி பெற்ற பார்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையிலும் மாவட்ட மேலாளர்களுடனான ஆய்வு கூட்டம் நாளை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மேலாண்மை இயக்குனர் தலைமையிலான இந்த கூட்டத்தில் 21 மாவட்ட மேலாளர்களும், 5 முதுநிலை மண்டல மேலாளர்களும் கலந்துகொள்ள உள்ளார்கள். மேலும், பணம் கட்டாமல் உள்ள பார்களை கணக்கெடுப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. இவ்வாறு கூறினார்.

Related Stories: