கவுகாத்தியில் முதல் டி20 இந்தியா-இலங்கை இன்று பலப்பரீட்சை

கவுகாத்தி: இந்தியா - இலங்கை அணிகள் மோதும் முதல் டி20 போட்டி, கவுகாத்தி பரசபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது. இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டி கவுகாத்தியில் இன்று நடைபெறுகிறது. ஆஸ்திரேலியாவில் ஐசிசி உலக கோப்பை டி20 தொடர் நடக்க உள்ள நிலையில், அதற்கு முன்னோட்டமாக அமைந்துள்ள இத்தொடரில் வெற்றி பெற இரு அணிகளுமே முனைப்புடன் களமிறங்குகின்றன.

இந்திய மண்ணில் கடைசியாக விளையாடிய 5 டி20 போட்டியிலும் இலங்கை அணி தோல்வியைத் தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது. விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி ஆதிக்கத்தை தொடரும் என எதிர்பார்க்கலாம். அதிரடி தொடக்க வீரர் ரோகித் ஷர்மாவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில், வேகப் பந்துவீச்சாளர் பூம்ரா முழு உடல்தகுதியுடன் விளையாடத் தயாராகி உள்ளது இந்திய அணிக்கு வலு சேர்த்துள்ளது. இலங்கை அணியில் அனுபவ ஆல் ரவுண்டர் ஏஞ்சலோ மேத்யூஸ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இடம் பிடித்துள்ளார். இரு அணிகளுமே வெற்றிக்காக வரிந்துகட்டுவதால் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

* இந்தியா: கோஹ்லி (கேப்டன்), தவான், கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே, சஞ்சு சாம்சன், ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, சாஹல், குல்தீப், ஜடேஜா, பூம்ரா, ஷர்துல் தாகூர், நவ்தீப் சைனி, வாஷிங்டன் சுந்தர்.

* இலங்கை: லசித் மலிங்கா (கேப்டன்), தனுஷ்கா குணதிலகா, அவிஷ்கா பெர்னாண்டோ, ஏஞ்சலோ மேத்யூஸ், தசுன் ஷனகா, குசால் பெரேரா, நிரோஷன் டிக்வெல்லா, தனஞ்ஜெயா டி சில்வா, இசுரு உடனா, பானுகா ராஜபக்ச, ஒஷதா பெர்னாண்டோ, வனிந்து ஹசரங்கா, லாகிரு குமாரா, குசால் மெண்டிஸ், லக்‌ஷன் சந்தகன், கசுன் ரஜிதா.

Related Stories: