ஜனவரி 31ம் தேதி நடைபெறும் சட்டமேலவை இடைத் தேர்தலில் உத்தவ் தாக்கரே போட்டியிடுகிறார்

மும்பை: மகாராஷ்டிரா சட்டமேலவை இடைத்தேர்தலில் முதல்வர் உத்தவ் தாக்கரே போட்டியிடுகிறார். யவத்மால் உள்ளாட்சி தொகுதிக்கான இடைத் தேர்தல் ஜனவரி 31ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 4ம் தேதி எண்ணப்படும். சிவசேனா எம்.எல்.சி. தானாஜி சாவந்த், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பூம் பரண்டா தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனதை தொடர்ந்து இந்த இடம் காலியாக உள்ளது. சட்டப்பேரவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு எம்.எல்.சி. காலியிடத்துக்கான இடைத் தேர்தலையும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இந்த இடைத்தேர்தல் ஜனவரி 24ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கையும் அதே தேதியில் நடைபெறும்.

தேசியவாத காங்கிரசை சேர்ந்த எம்.எல்.சி. தனஞ்சய் முண்டே, நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பார்லி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனதை தொடர்ந்து இந்த இடம் காலியாக உள்ளது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கடந்த நவம்பர் 28ம் தேதி மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றார். இவர் சட்டப்பேரவையின் இரு அவைகளிலும் உறுப்பினராக இல்லை. எனவே யவத்மால் உள்ளாட்சி தொகுதி இடைத்தேர்தலில் உத்தவ் தாக்கரே போட்டியிடுவார் என தெரிகிறது. அப்படி தேர்வு செய்யப்பட்டால் அவருடைய பதவிக்காலம் 2022 டிசம்பர் மாதம் வரை இருக்கும்.

இரண்டாவது காலியிடத்துக்கான இடைத் தேர்தலில் முன்னாள் அமைச்சர் சசிகாந்த் ஷிண்டேவை தேசியவாத காங்கிரஸ் நிறுத்துகிறது. இவர் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கோரேகாவ் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். சசிகாந்த் ஷிண்டே எம்.எல்.சி.யாக தேர்வு செய்யப்பட்டால் அவருடைய பதவிக்காலம் 2022 ஜூலை வரை இருக்கும். இந்த இரண்டு இடைத் தேர்தல்களையும் கூட்டாக சந்திப்பது என்று மகாராஷ்டிரா விகாஸ் அகாடியில் இடம் பெற்றுள்ள சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.

Related Stories: