மகாராஷ்டிரா அமைச்சர் அப்துல் சத்தார் ராஜினாமா?

மும்பை: மகாராஷ்டிராவில் அமைச்சர் அப்துல் சத்தார் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா விகாஸ் அகாடி கூட்டணி அரசு கடந்த நவம்பர் 28ம் தேதியன்று பதவியேற்றது. அப்போது உத்தவ் தாக்கரேயுடன் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த தலா 2 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். அதன் பிறகு கடந்த டிசம்பர் 30ம் தேதியன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் சிவசேனா சார்பில் சில்லோட் தொகுதி எம்.எல்.ஏ.வான அப்துல் சத்தாருக்கு இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

கேபினட் அமைச்சர் பதவியை எதிர்பார்த்திருந்த நிலையில் தனக்கு இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டதால் அப்துல் சத்தார் கடும் அதிருப்தியடைந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று அப்துல் சத்தார் தனது அமைச்சர் பதவியை திடீரென ராஜினாமா செய்தாக கூறப்படுகிறது. ராஜினாமா கடிதத்தை முதல்வர் உத்தவ் தாக்கரேக்கு அனுப்பி உள்ளதாக தெரிகிறது. ஆனால், முதல்வர் உத்தவ் தாக்கரே, அமைச்சரின் ராஜினாமா குறித்த செய்தியை உறுதிப்படுத்தவில்லை.  பதவியேற்ற 5 நாளில் அப்துல் சத்தார் ராஜினாமா செய்துள்ளதாக வெளியான செய்தி சிவசேனா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: