போராட்டத்தில் காயம் அடைந்தவர்களை சந்தித்து பிரியங்கா ஆறுதல்

முசாபர்நகர்: உத்தரப் பிரதேசத்தின் முசாபர் நகர், மீரட் ஆகிய பகுதிகளுக்கு, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று திடீர் பயணம் மேற்கொண்டார். உத்தர பிரதேசத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்த நடத்தப்பட்ட  போராட்டங்களில் வன்முறை வெடித்து 19 பேர் பலியாயினர், ஏராளமானோர் காயம் அடைந்தனர். அவர்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று முசாபர்நகருக்கு திடீர் பயணம் மேற்கொண்டார். காயம் அடைந்தவர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து, ‘நான் உங்களுக்கு ஆதரவாக இருப்பேன்’ என உறுதியளித்தார்.

பின்னர் அவர் அளித்த பேட்டியில் ‘‘போராட்டத்தில் ஈடுபட்ட சிறுவர்கள், குழந்தைகளும் கூட இரக்கமின்றி தாக்கப்பட்டுள்ளனர். 7 மாத கர்ப்பிணியும் தாக்கப்பட்டுள்ளார். போலீசாரின் அடக்குமுறை குறித்து, உ.பி ஆளுநர் ஆனந்திபென் படேலை சந்தித்து மனு கொடுத்துள்ளேன். லக்னோவில் காயம் அடைந்தவர்களின் குடும்பத்தினரை கடந்த வாரம் சந்தித்து ஆறுதல் கூறினேன். பிஜ்னூர், மீரட் ஆகிய பகுதிகளுக்கும் நான் ஏற்கனவே சென்றேன். ஆனால், போராட்டத்தில் பலியானவர்களின் குடும்பத்தினரை சந்திக்க, போலீசார் அனுமதிக்கவில்லை,’’ என்றார். முசாபர்நகர் பயணத்தை முடித்துக் கொண்ட அவர், அங்கிருந்து மீரட் நகருக்கு சென்று போராட்டத்தில் காயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

Related Stories: