உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அயோத்தி விவகாரத்தை கவனிக்க 3 பேர் குழு: மத்திய அரசு அமைத்தது

புதுடெல்லி: அயோத்தி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த கூடுதல் செயலாளர் ஜைனேஷ் குமார் தலைமையில் 3 பேர் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி- பாபர் மசூதி நில பிரச்னை தொடர்பாக கடந்த நவம்பர் 9ம் தேதி உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்தது. அதில், சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயிலை கட்டலாம் எனவும், இதற்காக தனி அறக்கட்டளையை 3 மாதத்துக்குள் அமைக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை செயல்படுத்த மத்திய அரசு கூடுதல் செயலாளர் ஜைனேஷ் குமார் தலைமையில் 3 பேர் குழுவை மத்திய அரசு அமைத்து உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், `அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு தொடர்பான விவகாரங்களை கையாள ஜைனேஷ் குமார் தலைமையில் 3 பேர் குழு நியமிக்கப்பட்டு உள்ளது, என கூறப்பட்டுள்ளது. குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜைனேஷ் குமார். மத்திய உள்துறை அமைச்சகத்தில் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் விவகாரங்களை கவனிக்கும் துறையின் தலைவராக உள்ளார். மேலும், இவர் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்கு மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையில் முக்கிய பங்காற்றினார். இதற்கிடையே, அயோத்தியில் பாபர் மசூதி கட்ட 5 காலி நிலங்களை உத்தர பிரதேச அரசு பரிந்துரை செய்து உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளது. இதில் ஒன்று உத்தரபிரதேச சன்னி வக்போர்டிடம் ஒப்படைக்கப்படும். இந்த விவகாரத்தையும் புதிய குழு கவனிக்கும் என உள்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

Related Stories: