குடியரசு தின விழாவில் பங்கேற்க மே.வங்க அரசு அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பு: திரிணாமுல் காங். ஆவேசம்

கொல்கத்தா: குடியரசு தின அணிவகுப்பில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த அலங்கார ஊர்திகள் இடம் பெற, மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. டெல்லியில் வரும் 26ம் தேதி குடியரசு தின அணிவகுப்பு பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதில், மாநிலங்களின் கலாசாரங்களை வெளிப்படுத்தும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இதற்காக, மாநில அரசுகளின் சார்பில் அலங்கார ஊர்திகள் அனுப்பி வைக்கப்படும். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான குடியரசு தின அணிவகுப்பில் மேற்கு வங்கத்தின் அலங்கார ஊர்திகள் இடம் பெறுவதற்கான பரிந்துரையை, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்துக்கு இம்மாநில அரசு அனுப்பியது.

இதை நேற்று முன்தினம் பாதுகாப்பு துறை நிராகரித்தது. இது தொடர்பாக அது வெளியிட்டுள்ள அறிக்கையில், `நிபுணர்கள் குழு 2 கட்டமாக ஆய்வு நடத்தியதை தொடர்ந்து, அணிவகுப்பில் மேற்கு வங்கத்தின் அலங்கார ஊர்திகள் இடம் பெற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் அரசு முறையான விதிமுறை, கொள்கையை பின்பற்றாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,’ என கூறப்பட்டுள்ளது. இதற்கு, மேற்கு வங்க அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது பற்றி இம்மாநில கலாசாரத் துறை அமைச்சர் டேபஸ் ராய் நேற்று அளித்த பேட்டியில், ‘`குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்ததால் மேற்கு வங்கத்தின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது மேற்கு வங்க மாநில மக்களை அவமானப்படுத்தும் செயல்,’’ என்றார்.

இதேபோல் மகாராஷ்டிரா மாநில அரசின் அலங்கார ஊர்திக்கும் மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. இதற்காக மத்திய அரசுக்கு அந்த மாநில அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மேற்குவங்கம் மற்றும் மகாராஷ்டிரா அரசின் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள மத்திய அரசு அலங்கார ஊர்தி தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. இதில், `பாஜ ஆளும் உத்தரகாண்ட், திரிபுரா, அருணாச்சலபிரதேசம், அரியானா ஆகிய மாநிலங்களை சேர்ந்த ஊர்திகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளது.

Related Stories: