சட்டத்தை அமல்படுத்துவது மாநிலங்களின் கடமை: ரவிசங்கர் காட்டம்

புதுடெல்லி: ‘‘நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை அமல்படுத்துவது மாநிலங்களின் அரசியலமைப்பு கடமையாகும்,’’ என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ள முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடெங்கும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இந்த சட்டத்தை வாபஸ் பெற மத்திய அரசை வலியுறுத்தி, கேரள சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல் மேற்கு வங்கம், பீகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநில அரசுகளும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக டெல்லியில் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நேற்று அளித்த பேட்டி;அரசியலமைப்பு சட்டப்படி பதவியேற்று அதிகாரத்துக்கு வந்தவர்கள், சட்டத்துக்கு புறம்பான கருத்துக்களை கூறி வருகின்றனர். குடியுரிமை திருத்த சட்டத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அல்லது இந்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியவர்கள் இது தொடர்பான சட்டப்பூர்வமான ஆலோசனைகளை  நிபுணர்களிடம் இருந்து கேட்டு பெற வேண்டும். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமான பின்பு அதை அமல்படுத்துவது மாநில அரசுகளின் அரசியலமைப்பு கடமையாகும். அதை மாநில அரசுகள் எதிர்க்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: