நாட்டில் வன்முறை, பழிவாங்கலுக்கு இடமில்லை: பிரியங்கா காந்தி பேட்டி

லக்னோ: நாட்டில் வன்முறை மற்றும் பழிவாங்கலுக்கு இடமில்லை என்று காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளர். உத்தரப் பிரதேசத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது வன்முறை சம்பங்கள் நடந்தன. உத்தரப் பிரதேசத்தில் போராட்டத்தின்போது உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களை காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார். நான்கு நாள் பயணத்தை முடித்த பிரியங்கா லக்னோவில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: எனது பாதுகாப்பு குறித்த கேள்வியானது மிகப்பெரிய விஷயம் கிடையாது. இதுகுறித்து விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. பாதுகாப்பு குறித்து பிரச்னை எழுப்ப மாட்டேன். அது மிகவும் அற்பமான விஷயமாகும். பொதுமக்களுடன் ஒப்பிடுகையில் இது ஒன்றுமில்லை. உத்தரப் பிரதேசத்தில் சாதாரண மக்களுக்கு பாதுகாப்பான சூழல் உள்ளதா என்பதுதான் இப்போதைய பிரச்னை. இரக்கத்தின் அடையாளமாக இருக்கும் கடவுள் கிருஷ்ணரின் நாடு இது. ராமரும் இரக்கத்திற்கு சான்றாய் இருந்தவர். சிவபெருமானின் திருமண ஊர்வலத்தில் அனைவரும் நடனம் ஆடுகிறார்கள். நாட்டின் ஆன்மாவில் வன்முறை, பழிவாங்கல் மற்றும் கோபத்திற்கு இடமில்லை.

மகாபாரத போர்களத்தில் அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்தபோது பழிவாங்குதல் மற்றும் கோபம் குறித்து கூறவில்லை. அவர் இரக்கம் மற்றும் உண்மையின் உணர்வுகளை தான் வெளியே கொண்டு வந்தார். முதல்வர் ஆதித்யநாத் ஒரு யோகியை போன்று உடையணிந்துள்ளார். இந்த காவி நிறம் உங்களுடையது அல்ல. இது மதத்துக்கு சொந்தமானது. இந்திய ஆன்மிக கலாசாரத்துக்கு சொந்தமானது. இந்து மதத்துக்கு சொந்தமானது. கோபம், வன்முறை மற்றும் பழிவாங்கலுக்கு இங்கே இடமில்லை. அனைவருக்கும் நான் சொல்ல வேண்டியது இது தான். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து ஆளுநர் ஆனந்திபென்னிடம் வழங்கிய 14 பக்கங்கள் அடங்கிய கோரிக்கை மனுவின் நகலை பிரியங்கா வெளியிட்டார்.

Related Stories: