இந்தியாவில் விரைவில் 5ஜி சேவை தொடங்கப்படும் : மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல்

புதுடெல்லி: இந்தியாவில் விரைவில் 5ஜி சேவை தொடங்கப்படும் என தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். 5ஜி அலைக்கற்றைக்கான சோதனைகள் கூடிய விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் கூறியுள்ளார். இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் செல்போன் சேவைகள் துறை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் பயணித்து வருகிறது. நாளுக்கு நாள் ஸ்மார்ட் போன் பயன்பாடு வேகமாக அதிகரிப்பதாக சுட்டி காட்டிய அவர், இதற்கு ஈடு கொடுக்கும் வகையில் தொழில்நுட்ப வசதிகளும் மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மக்கள் ஊடகம் தொடர்பான செய்திகளை டிஜிட்டல் முறையில் கையாள மிகப்பெரும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. இன்னும் 5 ஆண்டுகளில் இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை பயன்பாட்டிற்கு வந்து விடும் என்று தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய்யின் செயலாளர் எஸ்.கே. குப்தா தெரிவித்துள்ளார். அடுத்த 5 ஆண்டுகள் டிஜிட்டல் தளத்திலான இணைப்புக்கள் பல மடங்கு அதிகரித்து ஆதிக்கம் செலுத்தும் என்று அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்தியாவில் 5ஜி சேவை சோதனை முயற்சிகளில் பங்கேற்குமாறு நோக்கியா, எரிக்சன், சாம்சங் உள்ளிட்ட உலகளாவிய தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு தொடக்கத்தில் இந்திய அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது சீன தொலைத்தொடர்பு நிறுவனமான ஹூவாவேய் நிறுவனத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை. இதற்கு ஹூவாவேய் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் ஹூவாவேய்-க்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: