வீடியோ பாடம், சுண்ணாம்பு கோடுகள் மூலம் கணிதத்தை கற்கண்டாக பயிற்றுவிக்கும் அரசு பள்ளி: கற்றலை எளிதாக்கும் ஆய்வக உபகரணங்கள்

சேலம்: சேலம் அருகே உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் வீடியோ பாடம், சுண்ணாம்பு கோடுகள் மூலம் கணித பாடம் கற்கண்டாக பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. பள்ளி பருவத்தில் மட்டுமின்றி, கல்லூரி நாட்களிலும் கூட, மாணவர்களின் படிப்பின் மீதான ஆர்வம் குறைய முக்கிய காரணமாக இருப்பது, கணித பாடம் என்றால் அது மிகையாகாது. ஆனால், கரைப்பார் கரைத்தால், கல்லும் கரையும் என்பதற்கு ஏற்ப, கசப்பான கணிதத்தை கூட கற்கண்டாக மாற்றினால், மாணவர்களை வசப்படுத்தலாம். அத்தகைய சிறப்புடன் சேலத்தில் செயல்பட்டு வருகிறது, சர்க்கார்கொல்லப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. சேலம் ஊரக கல்வி மாவட்டத்தை சேர்ந்த இப்பள்ளியில், கற்றல், கற்பித்தலுக்கென பல்வேறு புதுமைகளை புகுத்தி, கற்றலை இனிமையாக்கி வருகின்றனர். குறிப்பாக, கணிதம் கற்பித்தலுக்கு, வீடியோ பாடம், சுண்ணாம்பு கோடுகள், கணித ஆய்வகங்கள் என அசத்தி வருவதால், மாணவர்களும் ஆர்வத்துடன் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

புதுமைகளை கண்டறிந்து, அவற்றை திறம்பட செயல்படுத்தி வரும் பள்ளியின் கணித பட்டதாரி ஆசிரியர் சிவராமகிருஷ்ணன் கூறியதாவது: ஏட்டில் இருப்பதை அப்படியே பாடமாக கொடுப்பதால், அவற்றை புரிந்து கொள்ள முடியாமல் மாணவர்கள் தவிக்கின்றனர். அதேசமயம், அவர்களுக்கு விருப்பமான முறையில் பயிற்றுவிக்கப்படும் போது, எளிமையாக புரியவைக்கவும், ஆர்வத்தை தூண்டவும் முடிகிறது. அந்த யுக்தியை தான், கணிதம் பயிற்றுவிக்க பயன்படுத்துகிறோம். கணிதம் மற்றும் தமிழ் பாடங்களை காணோளியாக தயார் செய்து. எல்.சி.டி-யில் மாணவர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்படுகிறது. மேலும், தமிழக அரசின், கல்வியல் ஆராய்ச்சி மற்றம் பயிற்சி நிறுவனம் வழங்கிய பல கற்றல்-கற்பித்தல் உபகரணங்களை சரியான முறையில் பயன்படுத்தி கற்றலை எளிமையாக்கப்பட்டு வருகிறது.

இதுதவிர, கணித ஆசிரியர்கள் பல காணோளிகளை, தாங்களாகவே தயார் செய்தும் திரையிட்டு வருகின்றனர். சுண்ணாம்பு கோடுகள் முறை, மாணவர்களுக்கு நேரடி அனுபவத்தை அளித்து கணிதத்தை எளிமையாக்குகிறது. அதாவது, சுண்ணாம்பு பவுடர் மூலம் பள்ளி வளாகத்தில் கோடுகள், சதுரம், செவ்வகம் மற்றும் முக்கோணங்களின் உருவங்கள் வரையப்படும். மாணவர்கள், அளவு டேப் கொண்டு தாங்களே அளந்து, அந்த வடிவங்களின் சுற்றளவு எவ்வளவு? பரப்பளவை எப்படி காணவேண்டும்? என தாங்களாகவே உணர்ந்து படிக்கின்றனர். சேலம் மாவட்டத்தில் மாதிரி கணித ஆய்வகம் வழங்கப்பட்ட இரு பள்ளிகளில், எங்களது பள்ளியும் ஒன்றாகும். இந்த ஆய்வக உபகரணங்கள் மூலம், நேரடியாக செய்து கற்பதால், கணிதத்தின் கருப்பொருள் எளிதில் மாணவர்களின் மனதில் பதிந்துவிடுகிறது. மாணவர்கள் தான் கற்கின்ற பாடப்பொருளுக்கு ஏற்ப, அந்த இடத்துக்கு நேரில் சென்று பார்த்து உணர்ந்து கற்றால், மிகவும் சிறப்பானதாக அமையும்.

அந்த வகையில், ராசிபுரம் அருகே அத்தனூரில் உள்ள சமூக காடுகள் வளர்க்கும் ஆய்வு கூடம், சேலம் குருவம்பட்டி உயிரியல் பூங்கா, மாநகரில் நடந்த புத்தக திருவிழாவிற்கு மாணவர்கள் அழைத்து செய்யப்பட்டுள்ளனர். மேலும், பாக்சைட் வெட்டி எடுக்கும் சுரங்களுக்கு சென்று, சுரங்க அமைப்பு, அதனை வெட்டும் முறையையும் மாணவர்கள் கற்றுக்கொண்டுள்ளனர். பள்ளியின் தமிழ் மற்றும் ஆங்கில இலக்கிய மன்றங்கள் மூலம் மாணவர்களின்  மொழித்திறன் மற்றும் பேச்சு திறனை வளர்க்கப்படுகிறது. அத்துடன், கணித மேதை ராமானுஜர் பெயரில் செயல்பட்டு வரும் கணித மன்றம் மூலமாக, வாழ்வியல் கணக்குகள், கணித புதிர்கள் கொடுத்து, மாணவர்களின் மனதில் நிலை நிறுத்தப்படுகிறது. சிறு நாடகங்கள், விளையாட்டு முறையும் கணிதம் கற்பித்தலுக்கு பயன்படுத்தப்படுகிறது.

பள்ளியிலேயே மாதம் ஒரு முறை நீதி கதைகளுடன் உள்ள குறும்படங்கள், மாணவர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்படுகிறது. இதுபோன்ற புதுமையான கற்றலின் மூலம், மாணவர்களின் கணித செயல்பாடுகள் அதிகரிப்பதுடன், அவர்களின் கற்பனை திறனை வளர்க்கும் வாய்ப்பும் ஏற்படுவதாக, ஆசிரியர் சிவராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

தொழில்நுட்ப வகுப்பறையில் கலக்கல்

பள்ளியில் உள்ள கணினி மூலம், மாணவர்கள் Ms-Word, Ms-Excel, Ms-paint போன்றவற்றை எளிதாக கையாளும் திறன் பெற்றுள்ளனர். மேலும், Tux math, Tux paint, Tux type போன்றவற்றிலும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர, யூடியூப் சேனல், வலை பக்கங்கள் மூலம், பல கணித கட்டுரைகள், கணித வல்லுனர்களின் வாழ்க்கை வரலாறு, கணித புதிர்கள் மற்றும் மாயக்கட்டங்கள் உருவாக்குதல் போன்ற தகவல்களை மாணவர்களுக்கும் மற்ற ஆசிரியர்களுக்கும் வழங்கப்படுகிறது.

மொழித்திறனை வளர்க்கும் கையெழுத்து பிரதி

உயர்தொடக்க மாணவர்களின் தமிழ் மொழி திறனை வளரக்கும் விதமாக, அவர்களுக்கு கவிதை எழுதுதல், கடிதம் எழுதுதல், கட்டுரை துணுக்குகள் மற்றும் புதிர்கள் எழுத பயிற்சியும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மாணவர்களின் படைப்புகள் அனைத்தும் “இறகு” என்ற பெயரில் கையெழுத்து பிரதியாக தமிழாசிரியர் வழிகாட்டுதலில்3 மாதங்களுக்கு ஒரு முறை வெளியிடப்படுகிறது. ஆண்டுதோறும் நடத்தப்படும் கவிதை போட்டியில், வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளின் புகைப்படத்துடன், சான்றிதழ் வழங்கப்படுகிறது.

Related Stories: